ஒரே நாளில் 2 நாடுகளில் 2 இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணிகள் மேட்ச்.. 1998-க்கு பின் அரங்கேறும் அதிசயம்
மும்பை: ஜப்பானின் ஐச்சி-நகோயாவில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான கிரிக்கெட் அட்டவணை வெளியாகியுள்ளது. இந்த அட்டவணையின்படி, வரும் அக்டோபர் 3-ம் தேதியன்று இரண்டு வெவ்வேறு இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணிகள், ஒரே நாளில் இரண்டு வெவ்வேறு நாடுகளில் விளையாடும் ஒரு அரிய வரலாற்று நிகழ்வு அரங்கேற வாய்ப்புள்ளது.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆண்கள் பிரிவில் இந்திய அணி நேரடியாக செப்டம்பர் 28 அன்று காலிறுதியில் விளையாடுகிறது. அரையிறுதி அக்டோபர் 1 அன்றும், இறுதிப்போட்டி அக்டோபர் 3 அன்றும் நடைபெற உள்ளது. அதே அக்டோபர் 3 அன்று, இந்தியாவில் நியூ சண்டிகரில் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 3-வது ஒருநாள் போட்டி நடைபெறவுள்ளது. இதனால் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றால், ஒரே நாளில் இரண்டு இந்திய அணிகள் இரு வேறு நாடுகளில் களமிறங்கும்.

வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடரில் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணியில் ரோஹித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட மூத்த வீரர்கள் விளையாட உள்ளனர். மறுபுறம் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய டி20 அணியில் சஞ்சு சாம்சன், பும்ரா, அக்சர் பட்டேல், அர்ஷ்தீப் சிங் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.
இதற்கு முன்பு 1998, செப்டம்பர் 12 அன்று ஒரே நாளில் கோலாலம்பூரில் நடந்த காமன்வெல்த் போட்டிகளிலும், டொராண்டோவில் நடந்த சஹாரா கோப்பையிலும் இரண்டு வேறுபட்ட இந்திய அணிகள் விளையாடியது குறிப்பிடத்தக்கது. தற்போது 28 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இதே போன்ற ஒரு சூழல் உருவாகியுள்ளது.
ஆசிய விளையாட்டுப் போட்டிக்குச் செல்லும் இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணிக்கு விவிஎஸ் லட்சுமண் தலைமைப் பயிற்சியாளராகச் செயல்படுவார் என விளையாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது. முதன்மைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பெண்கள் அணிக்கு அமோல் முஜும்தார் பயிற்சியாளராகச் செயல்படுவார்.
இந்த ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு மொத்தம் 768 பேர் கொண்ட பலமான இந்திய விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் அடங்கிய குழுவை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில் 503 தடகள வீரர்களும், 246 பயிற்சியாளர்கள் மற்றும் உதவியாளர்களும் அடங்குவர். கடந்த 2022 ஹாங்சோ ஆசிய விளையாட்டுப் போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையில் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications

