தமிழர் நவீன் உட்பட மூவருக்கு தங்கம்.. ஆசிய பாரா விளையாட்டில் 100 பதக்கங்களை கடந்து இந்தியா வரலாறு
நகோயா: ஜப்பான் நாட்டின் நகோயா நகரில் நடைபெற்று வரும் 2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில், இந்தியா 100 பதக்கங்களைத் தாண்டி மாபெரும் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. பாட்மிண்டன் மற்றும் தடகளக் களத்தில் அடுத்தடுத்து 3 இந்திய வீரர்கள் தங்கப் பதக்கங்களை அள்ளிக் குவித்தனர். இந்திய அணி 26 தங்கம் உட்பட மொத்தம் 102 பதக்கங்களை வென்று ஆசிய பாரா விளையாட்டில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
ஈட்டி எறிதலில் ஆண்களுக்கான எஃப்37/38 பிரிவில் களமிறங்கிய இந்தியாவின் நட்சத்திர வீரர் ஹனி, உலக சாதனையுடன் தங்கப் பதக்கத்தைத் தட்டிச் சென்றார். போட்டியின் 5-வது முயற்சியிலேயே 59.72 மீட்டர் தூரம் வீசி புதிய உலக சாதனை படைத்த இவர், தொடர்ந்து தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி ஈட்டியை 60.49 மீட்டர் தூரத்திற்கு எறிந்து தனது சொந்த உலக சாதனையை மீண்டும் முறியடித்தார். இவரது இந்த தங்கப் பதக்கத்தின் மூலமாகவே இந்தியா நடப்பு தொடரில் தனது 100 பதக்கங்கள் என்ற மைல்கல்லைக் கடந்து 101-வது பதக்கத்தைப் பதிவு செய்தது.

தடகளத்தில் மற்றொரு இந்திய வீரரான சந்தீப் குமார் அதிவேகத்தில் ஓடி உலக சாதனை படைத்தார். ஆண்களுக்கான 400 மீட்டர் டி64 பிரிவு இறுதிப்போட்டியில் மின்னல் வேகத்தில் சீறிப்பாய்ந்த இவர், எதிரணி வீரர்களுக்கு எந்த வாய்ப்பும் தராமல் பந்தய தூரத்தை வெறும் 52.28 வினாடிகளில் கடந்து தங்கப் பதக்கத்தை வென்றார். அத்துடன் இந்தப் பிரிவில் புதிய உலக சாதனையும் படைத்து ஒட்டுமொத்த மைதானத்தையும் பிரமிப்பில் ஆழ்த்தினார்.
இதற்கிடையே பேட்மிண்டன் களத்திலும் இந்திய வீரர்கள் தொடர்ந்து தங்கம் வென்று அசத்தினர். காலையில் நிதேஷ் குமார் தங்கம் வென்றதைத் தொடர்ந்து, ஆண்களுக்கான எஸ்எல்4 ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த நவீன் சிவகுமார் அபாரமாக விளையாடி தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார். ஒரே நாளில் அடுத்தடுத்து 2 உலக சாதனைகளுடன் இந்திய அணி 26 தங்கங்களை அள்ளி வரலாறு படைத்து இருக்கிறது. பதக்கப் பட்டியலில் இந்தியா புதிய உச்சத்தை நோக்கிப் வீறுநடை போடுகிறது.


Click it and Unblock the Notifications
