சென்னை: ஆசிய போட்டிகளில் இந்திய அணியை சிறப்பாக வழிநடத்தி தங்கப் பதக்கத்தை வென்ற ருதுராஜ் கெய்க்வாட், சக வீரர்களுடன் ஓரமாக நின்று எடுத்துக் கொண்ட புகைப்படம் ட்ரெண்டாகி வருகிறது.
2020ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் முதல் சென்னை அணிக்காக விளையாடி வருபவர் ருதுராஜ் கெய்க்வாட். இதுவரை 52 போட்டிகளில் விளையாடியுள்ள ருதுராஜ் கெய்க்வாட், 1797 ரன்களாஐ விளாசியுள்ளார். சென்னை அணிக்காக எத்தனையோ போட்டிகளில் வென்று கொடுத்து, ரசிகர்களின் அன்பை சம்பாதித்துள்ளார் ருதுராஜ். இந்திய அணியில் இன்னும் முழுமையாக வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், ஐபிஎல் தொடரில் நட்சத்திர வீரர் அந்தஸ்துக்கு சென்றுவிட்டார் என்றே கூறலாம்.

இதனால் சிஎஸ்கே அணியின் அடுத்த கேப்டனுக்கான ரேஸில் முதன்மையான வீரராக இருக்கிறார். ருதுராஜ் கெய்க்வாட்டின் அபாரமான எழுச்சியால் தோனிக்கு சிஎஸ்கே அணியை வழிநடத்தப் போவது ஜடேஜாவா அல்லது ருதுராஜ் கெய்க்வாடா என்ற விவாதம் எழுந்துள்ளது. தற்போது ருதுராஜ் கெய்க்வாட் அந்த ரேஸில் முன்னணியில் இருக்கிறார். ஆசிய போட்டிகளில் இந்திய அணியை வெற்றிகரமாக வழிநடத்தி தங்கத்தை கைப்பற்றியுள்ளார் ருதுராஜ் கெய்க்வாட்.
சீனாவில் அமைக்கப்பட்ட ஆடுகளங்களுக்கு ஏற்ப ஸ்பின்னர்களுடன் அட்டாக்கிற்கு சென்றதும், பேட்டிங்கில் பொறுப்புடன் அடியதுமே ருதுராஜ் கெய்க்வாட்டை தனித்துவம் மிக்க கேப்டனாக மாற்றியுள்ளது. இதற்கு முன்பாகவும் சையத் முஷ்டாக் அலி தொடரில் மகாராஷ்டிரா அணியை வழிநடத்திய அனுபவமும், மகாராஷ்டிரா லீக் தொடரில் கேப்டனாக வழிநடத்திய அனுபவமும் ருதுராஜிற்கு உள்ளது.
இந்த நிலையில் ஆசிய போட்டிகள் தொடரில் இந்திய அணியை வழிநடத்தி தங்கப்பதக்கம் வென்ற முதல் கேப்டன் என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார். எளிய வெற்றி என்றாலும், குறிப்பிடத்தகுந்த வெற்றியை தான் ருதுராஜ் பெற்றுள்ளார். அதுமட்டுமல்லாமல் வெற்றிக்கு பின் சக வீரர்களை முன்னிலைப்படுத்திவிட்டு தோனியை போல் கோலியை போல் ஓரமாக நின்று புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ள சம்பவம் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் கேப்டனுக்கான அத்தனை விஷயங்களையும் ருதுராஜ் கெய்க்வாட் பெற்றுள்ளதாக ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு 26 வயது மட்டுமே ஆகியுள்ளதால், தோனிக்கு பின் ருதுராஜ் கெய்க்வாடே கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது.