மெல்போர்ன்: 2025 ஆஸ்திரேலிய ஓபன் அரை இறுதிப் போட்டியில் உலகின் முன்னணி டென்னிஸ் வீரரான நோவாக் ஜோகோவிக் முதல் செட் முடிந்தவுடன் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அவருக்கு காலில் உள்காயம் ஏற்பட்டு வலி இருந்தது.
அதனால், அரை இறுதிப் போட்டியின் முதல் செட் முடிவில் மருத்துவரை அணுகினார். அவருக்கு முதல் உதவி அளிக்கப்பட்டது. ஆனால், அதன் பின் தன்னால் தொடர்ந்து விளையாட முடியாது என நோவாக் ஜோகோவிக் அறிவித்தார்.

இந்த நிலையில், மெல்போர்னில் போட்டி நடைபெற்ற அரங்கில் இருந்த ரசிகர்கள் நோவாக் ஜோகோவிக் வேண்டுமென்றே விலகியதாக நினைத்து அவருக்கு எதிராக கோஷமிட்டனர். அதனால், ஆஸ்திரேலிய ஓபன் அரங்கில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த அரை இறுதியில் நோவாக் ஜோகோவிக்கை எதிர்த்து ஆடிய ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வரெவ் இறுதிப் போட்டிக்கு முன்னேறியதாக அறிவிக்கப்பட்டது. இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் ஜானிக் சின்னர் மற்றும் பென் ஷெல்டன் மோத உள்ளனர். அதில் வெற்றி பெறும் வீரர் ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வரெவ்-ஐ சந்திக்கும் வாய்ப்பை பெறுவார்.
2025 ஆஸ்திரேலிய ஓபன் தொடரின் கால் இறுதிச் சுற்றின் போது நோவாக் ஜோகோவிக்கிற்கு தொடையில் தசைப் பிடிப்பு ஏற்பட்டது. எனினும், அதை சமாளித்து அவர் வெற்றி பெற்று இருந்தார். எனினும், அப்போது கார்லோஸ் அல்கராஸ்-ன் கவனத்தை திசை திருப்பவே ஜோகோவிக் காயம் ஏற்பட்டதாக நாடகம் ஆடினார் என ஆஸ்திரேலிய ரசிகர்கள் குற்றம் சுமத்தி இருந்தனர்.
ஆனால், முதல் அரை இறுதிப் போட்டிக்கு முன் காயம் காரணமாக தனது பயிற்சியை ரத்து செய்து இருந்தார் நோவாக் ஜோகோவிக். இந்த நிலையில் தான் முதல் அரை இறுதிப் போட்டியில் அலெக்சாண்டர் ஸ்வரெவ் மற்றும் நோவாக் ஜோகோவிக் மோதினர். முதல் செட் நீண்ட இழுபறிக்கு பின் ஸ்வரெவ்-இற்கு சாதகமாக முடிந்தது.
அப்போது ஜோகோவிக் சரியாக நிற்க முடியாமல் வலியில் துடித்தார். பின்னர் மருத்துவர் அவரை பரிசோதித்து சில முதல் உதவி சிகிச்சையை அளித்தார். அப்போதே ரசிகர்கள் ஜோகோவிக் ஏமாற்றுவதாக கோஷம் எழுப்பினர். அதைத் தொடர்ந்து ஜோகோவிக் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.