செண்ட் லூசியா : உலகக்கோப்பை தொடரில் நூலிழையில் ஆஸ்திரேலியாவிடம் அடைந்த தோல்விக்கு, ஆஃப்கானிஸ்தான் அணி டி20 உலகக்கோப்பையில் பதிலடி கொடுத்துள்ளது.
கடந்த ஆண்டு இந்தியாவில் நடந்த உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா அணியிடம் நூலிழையில் ஆஃப்கானிஸ்தான் அணி தோல்வியடைந்தது. அந்த போட்டியில் முதல் பேட்டிங் ஆடிய ஆஃப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 291 ரன்களை குவித்தது. இதன்பின் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 91 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனால் திடீரென கிளென் மேக்ஸ்வெல் ஆடிய ஆட்டம் ஒட்டுமொத்த ஆட்டத்தையும் மாற்றியது.

ஒற்றை காலில் காயத்துடன் மேக்ஸ்வெல் ஆடிய ஆட்டம் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த இன்னிங்ஸாக மாறியது. 128 பந்துகளில் 10 சிக்ஸ், 21 பவுண்டரி உட்பட 201 ரன்களை விளாசி வெற்றிபெற வைத்தார். இந்த வெற்றியின் காரணமாக ஆஃப்கானிஸ்தான் அணி வீரர்கள் மைதானத்திலேயே கண்ணீர் சிந்தினர். இந்த நிலையில் டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்த்து ஆஃப்கானிஸ்தான் அணி விளையாடியது.
இந்த போட்டிக்கு முன் ஆஃப்கானிஸ்தான் கேப்டன் ரஷித் கான் பேசுகையில், ஒவ்வொரு நாள் இரவு தூங்கும் போதும் ஆஸ்திரேலியாவிடம் அடைந்த தோல்வி நினைவில் வரும் என்று தெரிவித்திருந்தார். தற்போது ஆஸ்திரேலியா அணியை 21 ரன்கள் வித்தியாசத்தில் ஆஃப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி தரமான பதிலடியை கொடுத்துள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 148 ரன்கள் சேர்த்தனர்.
இதன்பின் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 85 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது மேக்ஸ்வெல் அதிரடியாக அரைசதம் விளாசினாலும் மறுமுனையில் எந்த வீரர்கள் நிற்க முடியவில்லை. இறுதியாக 19.2 ஓவர்களில் ஆஸ்திரேலியா அணி 127 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. இதன் மூலம் உலகக்கோப்பையில் மிஸ் செய்த வெற்றியை, டி20 உலகக்கோப்பையில் அடைந்து ஆஃப்கானிஸ்தான் அணி தரமான பதிலடியை கொடுத்துள்ளது.
இதனால் ரசிகர்கள் பலரும் ஆஃப்கானிஸ்தான் அணிக்கு வாழ்த்து கூறி வருகின்றனர். ஆஃப்கானிஸ்தான் அணி தரப்பில் சிறப்பாக பவுலிங் செய்த குல்புதின் நைப் 4 விக்கெட்டுகளையும், நவீன் உல் ஹக் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர். இதன் மூலமாக ஆஸ்திரேலியா அணியின் அரையிறுதி சுற்று கனவிற்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.