பஸ்ஸிலேயே ஆரம்பம்.. பிராவோவுடன் டான்ஸ் ஆடிய ஆஃப்கான் வீரர்கள்.. எந்த பாடலுக்கு வைப் ஆகுறாங்க பாருங்க
கிங்ஸ்டவுன் : ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் மிரட்டல் வெற்றியை பெற்றது. இதன்பின் ஹோட்டலுக்கு பேருந்தில் சென்ற போதே கொண்டாட்டத்தை தொடங்கியுள்ளனர். அதிலும் பிராவோவின் பாடலான சாம்பியன் பாடலை ஒட்டுமொத்த அணியும் பாடிக்கொண்டே வைப் செய்த வீடியோ ட்ரெண்டாகி வருகிறது.
2023 உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அதிர்ச்சி தோல்வியை அடைந்தது. 91 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை ஆஸ்திரேலியா அணி இழந்து தடுமாறிய போது, மேக்ஸ்வெல் ஒற்றை ஆளாக நின்று இரட்டை சதம் விளாசி வென்று கொடுத்தார். இந்த போட்டிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆஃப்கானிஸ்தான் அணி தரமான சம்பவத்தை செய்துள்ளது.

டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஃப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 148 ரன்களை சேர்த்தது. இதன்பின் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 19.2 ஓவர்களில் 127 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. இதன் மூலமாக உலகக்கோப்பையில் அடைந்த தோல்விக்கு, டி20 உலகக்கோப்பையில் ஆஃப்கானிஸ்தான் அணி பழி தீர்த்துள்ளது.
ஆஸ்திரேலியா போன்ற சாம்பியன் அணியை முதல்முறையாக ஆஃப்கானிஸ்தான் அணி வீழ்த்தியதால், அந்த அணி வீரர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மைதானத்திலேயே கொண்டாட்டத்தை தொடங்கினாலும், அது ஹோட்டலுக்கு செல்லும் பேருந்திலும் தொடர்ந்தது. அந்த பேருந்தில் ஆஃப்கானிஸ்தான் அணியின் பவுலிங் ஆலோசகராக உள்ள டுவைன் பிராவோ பாடிய சாம்பியன் பாடலை ஒலிபரப்பினர்.
அதன்பின் ஒட்டுமொத்த ஆஃப்கானிஸ்தான் அணியும் இணைந்து சாம்பியன் பாடலை பாடி டுவைன் பிராவோவுக்கு நன்றி கூறினர். ஆஸ்திரேலியா அணி ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடவிருந்த டி20 தொடரை ஒத்தி போட்டுக் கொண்டே சென்றது. 2 ஆண்டுகளுக்கும் மேலாக ஆஃப்கானிஸ்தான் அணியுடன் விளையாடாமல் ஆஸ்திரேலியா அவமானம் செய்தது.
அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த வெற்றி அமைந்துள்ளது. ஆஃப்கானிஸ்தான் வீரர்களின் இந்த வீடியோ சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது. டி20 உலகக்கோப்பை தொடருக்காக வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் டுவைன் பிராவோவை ஆஃப்கானிஸ்தான் அணி பவுலிங் ஆலோசகராக கொண்டு வந்தது. அவர் வருகைக்கு பின் ஃபரூக்கி, நவீன் உல் ஹக் இருவரும் வேறு மாதிரி முன்னேற்றம் கண்டுள்ளனர். இந்த டி20 உலகக்கோப்பையில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் ஃபரூக்கி முதலிடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications