AUS vs AFG : திமிரால் வந்த தோல்வி.. ஸ்டார்க்கை பெஞ்ச் செய்த ஆஸ்திரேலியா.. ஆப்பு வைத்த ஆஃப்கானிஸ்தான்
கிங்ஸ்டவுன் : ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்துள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் ஆஃப்கானிஸ்தான் அணியிடம் முதல்முறையாக ஆஸ்திரேலியா அணி தோல்வியடைந்துள்ளது. இதனால் ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
ஆஃப்கானிஸ்தான் அணி நிர்ணயித்த 149 ரன்கள் இலக்கை எட்ட கூட முடியாமல் ஆஸ்திரேலியா அணி 19.2 ஓவர்களில் 127 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. இந்த தோல்விக்கு ஆஸ்திரேலியா அணியின் ஃபீல்டிங்கே காரணம் என்று விமர்சனங்கள் எழுந்தன. ஏனென்றால் ஆஃப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களான குர்பாஸ் 60 ரன்களும், ஜத்ரான் 52 ரன்களும் எடுத்துள்ளனர்.

அவர்கள் இருவரையும் வீழ்த்த கேட்ச், ரன் அவுட் வாய்ப்புகள் கிடைத்த போது, ஆஸ்திரேலியா வீரர்கள் வீணடித்தனர். அதேபோல் பவர் பிளே ஓவர்களில் ஆஸ்திரேலியா அணி அவசரமாக விளையாடி 3 விக்கெட்டுகளை பறி கொடுத்தது. இதன்பின் மேக்ஸ்வெல் ஒரு பக்கம் நின்று பேட்டிங் செய்த போதும், தேவையின்றி பெரிய ஷாட்டிற்கு சென்று விக்கெட்டை விட்டுச் சென்றனர்.
அதேபோல் ஆஃப்கானிஸ்தான் ஸ்லோயர் பந்துகளை எதிர்கொள்ள முடியாமல் டெய்லண்டர்களும் விக்கெட்டை கொடுத்தனர். இவையெல்லாம் கடந்து ஆஸ்திரேலியா எடுத்த தவறான முடிவே, அந்த அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்துள்ளது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணியின் இடதுகை வேகப்பந்துவீச்சாளரான மிட்சல் ஸ்டார்க்கை பெஞ்ச் செய்தது.
இதுகுறித்து ஆஸ்திரேலியா கேப்டன் மிட்சல் மார்ஷ் கூறுகையில், சூழலுக்கு ஏற்ப மிட்சல் ஸ்டார்க்கிற்கு ஏற்ப அகர் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ஆஸ்திரேலியா அணியில் இருக்கும் நட்சத்திர இடதுகை வேகப்பந்துவீச்சாளர் மிட்சல் ஸ்டார்க் தான். அவரின் யார்க்கர் மற்றும் இன்ஸ்விங் பந்துகள் உலகின் எந்த பேட்ஸ்மேனையும் அதிர வைக்கும்.
ஆஃப்கானிஸ்தான் அணியில் தொடக்க வீரர்கள் மட்டுமே சிறந்த பேட்ஸ்மேனாக இருக்கின்றனர் என்பதை அறிந்தும் ஆஸ்திரேலியா அணி மிட்சல் ஸ்டார்க்கை பெஞ்ச் செய்துள்ளது. இந்த முடிவுக்கு பின் ஆஃப்கானிஸ்தான் அணியை சாதாரணமாக எடுத்து கொண்டதே ஸ்டார்க் பெஞ்ச் செய்யப்பட்டதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது. இதனால் ரசிகர்கள் பலரும் ஆஸ்திரேலியா அணி ஆணவத்தால் வீழ்ந்துள்ளதாக விமர்சித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications