பெர்த்: பெர்த் மைதானத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஆஷஸ் டெஸ்ட் போட்டியில், ட்ராவிஸ் ஹெட்டின் செயலால் இங்கிலாந்து அணி முற்றிலுமாக உடைந்து போனது. டெஸ்ட் போட்டிகளில் ஒரு ஓவருக்கு 10 ரன்கள் அடித்தாலே அது வியக்கத்தக்க செயல்பாடு. ஆனால், அதையும் தாண்டி ஒரு சம்பவத்தை செய்தார் ட்ராவிஸ் ஹெட்.
இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 172 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா அணி தனது முதல் இன்னிங்ஸில் 132 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்தடுத்து, இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 164 ரன்கள் எடுத்து, ஆஸ்திரேலியா அணிக்கு 205 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயம் செய்தது.

இந்த மைதானத்தில் இந்த ஸ்கோரை எடுப்பது மிகவும் சவாலானது என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தான் ட்ராவிஸ் ஹெட் அதிரடி ஆட்டத்தை ஆடி மிரட்டினார். ஒரு கட்டம் வரை இங்கிலாந்து அணி ஹெட் விக்கெட்டை வீழ்த்தி விட்டால் வெற்றி பெறலாம் என நம்பிக்கையுடன் தான் இருந்தது.
ஆனால், எப்போது ட்ராவிஸ் ஹெட் ஒரு ஓவருக்கு 15 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களை எடுக்க ஆரம்பித்தாரோ, அப்போது இங்கிலாந்து வீரர்களின் முகத்தில் கலக்கம் ஏற்பட்டது. ஆக்ரோஷமான அவர்களது உடல்மொழி அப்படியே சரிந்தது. இனி வெற்றி பெற வாய்ப்பே இல்லை என்ற நிலைமைக்கு அவர்கள் சென்றனர்.
குறிப்பாக, மூன்று முக்கிய பந்துவீச்சாளர்களுக்கு எதிராக ஒரு ஓவருக்கு 15 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களைச் சேர்த்தார் ட்ராவிஸ் ஹெட். முதலில், இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் வீசிய 17 ஆவது ஓவரில் நான்கு பவுண்டரிகள் உட்பட மொத்தம் 17 ரன்களைச் சேர்த்தார்.
அடுத்து, ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய 19 ஆவது ஓவரில் ஒரு சிக்ஸ் மற்றும் இரண்டு பவுண்டரிகள் உட்பட மொத்தம் 16 ரன்களைச் சேர்த்தது ஆஸ்திரேலிய அணி. அடுத்து கஸ் அட்கின்சன் வீசிய 26 ஆவது ஓவரில் நான்கு பவுண்டரிகள் உட்பட மொத்தம் 20 ரன்கள் சேர்த்தார்.
அதற்கு அடுத்த ஓவரிலும் இரண்டு பவுண்டரிகள் அடித்த அவர், 123 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். வெறும் 83 பந்துகளில் 123 ரன்கள் எடுத்து இங்கிலாந்து அணியை மிரட்டி இருந்தார் ட்ராவிஸ் ஹெட். அப்போதே ஆஸ்திரேலியா வெற்றிக்கு மிக அருகில் இருந்தது.
28.2 ஓவர்களில் எல்லாம் 205 ரன்கள் என்ற இலக்கை எட்டி ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தின் முதல் மூன்று இன்னிங்ஸ்களிலும் இங்கிலாந்து அணிதான் சிறப்பாகச் செயல்பட்டு இருந்தது. ஆனால் நான்காவது இன்னிங்ஸில் யாரும் நினைத்துப் பார்க்க முடியாத செயலைச் செய்த ட்ராவிஸ் ஹெட், ஆஸ்திரேலியா அணியை தனி ஆளாக வெற்றி பெற வைத்தார்.