"எங்கள் கையைவிட்டு சென்றுவிட்டது.. அந்த 1 மணி நேரம் நிறைய கற்றுக்கொடுத்தது".. ரஹானே பரபர பேட்டி!
சிட்னி: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சந்தித்த மோசமான தோல்விக்கு நிறைய பாடங்களை கற்றுக்கொடுத்தது என்று இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரஹானே தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2வது டெஸ்டில் இந்தியா அதிரடி வெற்றி பெற்றுள்ளது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 195 ரன்கள் எடுத்து இருந்த நிலையில் ஆல் அவுட் ஆனது.இரண்டாவது இன்னிங்சிலும் ஆஸ்திரேலியா 200 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
முதல் இன்னிங்ஸில் இந்திய அணி சிறப்பாக பேட்டிங் செய்து 326 ரன்கள் எடுத்தது. இந்த நிலையில் 2வது இன்னிங்ஸில் இந்தியா 2 விக்கெட்டிற்கு 70 ரன்கள் எடுத்து வென்றது.

வெற்றி
இந்த நிலையில் இந்திய அணியின் வெற்றிக்கு பின் கேப்டன் ரஹானே அளித்த பேட்டியில், இந்திய வீரர்களை நினைத்தால் பெருமையாக இருக்கிறது. எல்லோரும் சிறப்பாக விளையாடினார்கள். அணியில் அறிமுகமாகி இருக்கும் சிராஜ், கில் இரண்டு பேருமே பெரிய அளவில் நம்பிக்கை அளித்தனர். அடிலைட் போட்டிக்கு பின் இந்திய வீரர்கள் ஆடிய விதம் பெரிய அளவில் நம்பிக்கை அளித்துள்ளது.

எப்படி
மைதானத்தில் எப்படிப்பட்ட குணத்தை காட்டுகிறோம் என்பதுதான் முக்கியம். அதிலும் உமேஷ் யாதவ் இரண்டாவது இன்னிங்சில் பாதியில் வெளியேறினார். எங்களுக்கு 5 பவுலர்கள் டெக்னிக் உதவியது. அவர் வெளியேறிய பின்பும் கூட நாங்கள் உறுதியாக இருந்தோம். அதுதான் முக்கியம்.

ஆல் ரவுண்டர்
ஒரு ஆல் ரவுண்டர் வேண்டும் என்று நாங்கள் நினைத்தோம். அந்த பணியை ஜடேஜா சிறப்பாக செய்தார். அதேபோல் சுப்மான் கில் மிகவும் சிறப்பாக ஆடினார். அவரின் முதல் தர ஆட்டங்களில் ஆடியது போல இப்போதும் ஆடினார். அவர் ஆடிய சில ஷாட்கள் மிகவும் சிறப்பாக இருந்தது.

சிராஜ்
அதேபோல் சிராஜ் தன்னிடம் இருக்கும் திறமையை நிரூபித்தார். ஒரு அறிமுக வீரர் இப்படி பவுலிங் செய்வது மிகவும் கடினம். அவரின் முதல்தர போட்டி அனுபவங்களை சிராஜ் மிக சிறப்பாக வெளிக்காட்டி இருக்கிறார். மைதானத்தில் அவர் நடந்து கொண்ட விதம் சிறப்பாக இருந்தது.

அடிலைட் டெஸ்ட்
அடிலைட் டெஸ்ட் போட்டியில் ஒரு மணி நேரத்தில் எல்லாம் எங்கள் கையை விட்டு சென்றுவிட்டது. ஒரு மணி நேரத்தில் எல்லாம் எங்கள் கையை விட்டு சென்றுவிட்டது. அதில் நிறைய நாங்கள் கற்றுக்கொண்டோம். இப்போதும் கூட நாங்கள் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது., என்று ரஹானே குறிப்பிட்டுள்ளார் .


Click it and Unblock the Notifications