பிரிஸ்பேன்: இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் வேகப் பந்துவீச்சாளர்கள் மிட்செல் ஸ்டார்க் மற்றும் பாட் கம்மின்ஸ் தொடர்ந்து பந்து வீசி நொந்து போனார்கள். அதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன.
இந்திய அணி ஃபாலோ ஆன் ஆபத்தை தாண்டியதற்கு மிட்செல் ஸ்டார்க் மற்றும் பாட் கம்மின்ஸ் சோர்வாக இருந்ததும் முக்கிய காரணம் ஆகும்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிய மூன்றாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேன் நகரில் டிசம்பர் 14 அன்று தொடங்கியது. இந்த போட்டியின் இடையே சுமார் பத்து முறை மழை குறுக்கிட்டது. இதன் இடையே நடந்த இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து முதல் இன்னிங்ஸில் 445 ரன்கள் எடுத்தது.
அடுத்து இந்திய அணி பேட்டிங் செய்த போது ஆஸ்திரேலிய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜோஷ் ஹேசல்வுட் காயம் காரணமாக பாதியில் விலகினார். அவரால் இந்த போட்டியில் மீண்டும் பந்து வீச முடியாது என்ற நிலை ஏற்பட்டது. இந்த போட்டியை எப்படியாவது வெல்ல வேண்டும் என்ற ஆர்வத்தில் இருந்தது ஆஸ்திரேலிய அணி.
ஆனால், ஒரு முக்கிய பந்துவீச்சாளர் இல்லாத நிலையில் மிட்செல் ஸ்டார்க் மற்றும் கேப்டன் பாட் கம்மின்ஸ்-க்கு அதிக சுமை ஏற்பட்டது. மூன்றாவது பந்து வீச்சாளராக சுழற் பந்துவீச்சாளர் நாதன் லியோன் செயல்பட்டார். ஆனால், இந்த மைதானத்தில் சுழற் பந்துவீச்சால் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை.
அதனால், ஆஸ்திரேலிய அணிக்கு அழுத்தம் ஏற்பட்டது. மறுபுறம் மழை பெய்து கொண்டு இருந்ததால் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களால் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்க முடியவில்லை. அது ஒரு புறம் இருக்க ஸ்டார்க் மற்றும் கம்மின்ஸ் அதிக ஓவர்களை வீசினர். ஏனெனில். மூன்றாவது வேகப் பந்துவீச்சாளர் என யாரும் இல்லை.
ஆஸ்திரேலிய அணியின் பகுதிநேர வேகப் பந்துவீச்சாளரான மிட்செல் மார்ஷ் 2 ஓவர்கள் மட்டுமே வீசினார். அவருக்கு காலில் காயம் இருப்பதால் ஏற்கனவே பந்து வீச முடியாத நிலை உள்ளது. அவர் ஒரு பேட்ஸ்மேன் ஆக மட்டுமே இந்த போட்டியில் பங்கேற்றார். எனவே, அவரையும் அதிகமாக பயன்படுத்த முடியவில்லை.
எனவே, ஸ்டார்க் மற்றும் கம்மின்ஸ் மிகவும் சோர்வுடன் காணப்பட்டார்கள். இந்திய அணி நான்காம் நாளின் ஆட்ட நேர முடிவில் 74.5 ஓவர்கள் பேட்டிங் செய்து இருந்த நிலையில் அதில் ஸ்டார்க் மட்டும் 24 ஓவர்கள் வீசி இருந்தார். கம்மின்ஸ் 20.5 ஓவர்கள் வீசி இருந்தார். இவர்கள் இருவரும் கிட்டத்தட்ட 45 ஓவர்களை வீசி உள்ளனர்.
பொதுவாக வேகப் பந்துவீச்சாளர்கள் ஒட்டுமொத்த இன்னிங்ஸின் ஓவர்களில் ஐந்தில் ஒரு பங்கு வீசுவது சரியான பணிச் சுமையாக இருக்கும். அதற்கு அதிகமாக வீசுவது அவர்களுக்கு அதிக சுமையாக மாறும். ஆனால், இங்கே ஸ்டார்க் மற்றும் கம்மின்ஸ் மூன்றில் ஒரு பங்கு ஓவர்களை வீசி உள்ளனர். இது நிச்சயமாக வேகப் பந்துவீச்சாளர்களுக்கு அதிகபட்ச பனி சுமையாகும்.
கம்மின்ஸ் மற்றும் ஸ்டார்க் சோர்வாக இருந்ததோடு, அடிக்கடி மழையால் போட்டி நிறுத்தப்பட்டு மீண்டும் தொடங்கியதால் அவர்களால் இந்திய அணிக்கு அழுத்தம் கொடுக்க முடியவில்லை. அதிலும் மிட்செல் ஸ்டார்க் மழையின் காரணமாக போட்டி நிறுத்தப்பட்ட போது ஒவ்வொரு முறையும் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
சிலமுறை அம்பயர்களுடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டார். அந்த அளவுக்கு ஸ்டார்க் மற்றும் கம்மின்ஸ் சோர்ந்து போனார்கள். இது இந்திய அணிக்கு சாதகமான விஷயமாக மாறி உள்ளது. ஐந்தாம் நாள் ஆட்டத்தில் நிச்சயமாக ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களாவது பேட்டிங் செய்யும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அதன் பின் ஸ்டார்க் மற்றும் கம்மின்ஸ் மீண்டும் பந்து வீச வரும்போது அவர்களால் தங்களின் 100 சதவீத சக்தியை கொடுக்க முடியாத நிலை இருக்கும். அதை பயன்படுத்தி இந்திய அணி இந்த போட்டியை டிரா செய்யலாம்.