திருவனந்தபுரம் : ஆஸ்திரேலியா - நெதர்லாந்து அணிகள் இடையே ஆன 2023 உலகக்கோப்பை பயிற்சிப் போட்டியில் மிட்செல் ஸ்டார்க் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து இருக்கிறார்.
மிட்செல் ஸ்டார்க் கடந்த சில மாதங்களாக காயம் காரணமாக கிரிக்கெட் போட்டிகளில் ஆடவில்லை. இந்த நிலையில், அவரது ஃபார்ம் குறித்த சந்தேகம் பலருக்கும் இருந்தது.

அதை நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் உடைத்துள்ள ஸ்டார்க் ஹாட்ரிக் விக்கெட் எடுத்ததோடு மூன்று நெதர்லாந்து பேட்ஸ்மேன்களையும் டக் அவுட் ஆக்கி மிரட்டி இருக்கிறார். அவரது ஹாட்ரிக் விக்கெட் என்பது உலகக்கோப்பை தொடருக்கு முன் மற்ற அணிகளுக்கு விடப்பட்ட எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது.
ஆஸ்திரேலியா - நெதர்லாந்து அணிகள் தங்களின் முதல் பயிற்சிப் போட்டியில் மோதின. மழை காரணமாக தாமதமாக நடந்த இந்தப் போட்டி 23 ஓவர்களாக குறைக்கப்பட்டது. முதலில் ஆஸ்திரேலியா அணி பேட்டிங் செய்தது.
ஆஸ்திரேலியா அணியில் ஸ்டீவ் ஸ்மித் துவக்க வீரராக களமிறங்கினார். அவர் 55 ரன்கள் எடுத்தார். ஜோஷ் இங்கிலிஸ் டக் அவுட் ஆனார். அலெக்ஸ் கேரி 28, கேமரான் கிரீன் 34, மிட்செல் ஸ்டார்க் 24 ரன்கள் எடுத்தனர்.
ஆஸ்திரேலியா 23 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்தது. அடுத்து நெதர்லாந்து அணி பேட்டிங் செய்ய வந்தது. முதல் ஓவரை மிட்செல் ஸ்டார்க் வீசினார்.
அந்த ஓவரின் கடைசி இரண்டு பந்துகளில் மேக்ஸ் ஓடோட் எல்பிடபுள்யூ முறையில் டக் அவுட் ஆனார். அடுத்து வந்த வெஸ்லி பர்ரேஸி அடுத்த பந்திலேயே பவுல்டு அவுட் ஆகி வெளியேறினார்.
இரண்டு பந்துகளில் இரண்டு விக்கெட் எடுத்த ஸ்டார்க், அடுத்து தான் வீசிய மூன்றாவது ஓவரின் முதல் பந்தில் பஸ் டி லீடே-வை பவுல்டு அவுட் ஆக்கி டக் அவுட் ஆக்கினார். ஸ்டார்க் அபாரமாக ஸ்விங் பந்துகளை வீசினார்.
அதிகமாக தரமான ஸ்விங் பந்துவீச்சை சந்தித்து இருக்காத அந்த மூன்று நெதர்லாந்து வீரர்களும் பரிதாபமாக தாங்கள் சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி "கோல்டன் டக்" என்ற அடையாளத்துடன் ஆட்டமிழந்து வெளியேறினர்.
இதை அடுத்து இந்தப் போட்டியில் 14.2 ஓவரின் போது மழை மீண்டும் குறுக்கிட்டது. அப்போது நெதர்லாந்து 6 விக்கெட் இழந்து 84 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தது. மழை அதிகமாக பெய்ததால், போட்டி அத்துடன் கை விடப்பட்டது.
இந்தப் போட்டியின் மூலம், ஆஸ்திரேலியா உலகக்கோப்பை தொடரில் என்ன செய்யப் போகிறது என ஒரு சின்ன ட்ரெயிலர் காட்டியது போலத் தான் உள்ளது. இந்திய அணிக்கு எதிராக மூன்றாவது போட்டியின் வெற்றி, தற்போது கத்துக்குட்டி அணிக்கு எதிராக உச்சபட்ச ஆதிக்கம் என ஆஸ்திரேலியா தான் இன்னும் உலகக்கோப்பை ரேஸில் முன்னிலையில் இருக்கிறேன் என காட்டி இருக்கிறது.