தரம்சாலா : நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா அதிரடி பவர்பிளே திட்டத்தால் பந்துவீச்சாளர்களை பந்தாடியது.
என்ன செய்தாலும் ஆஸ்திரேலியாவின் ரன் குவிப்பை தடுக்க முடியாமல் நியூசிலாந்து அணி திணறியது. முதல் 10 ஓவர்களுக்குள் நான்கு பந்துவீச்சாளர்களை மாற்றிப் பார்த்தும் ஒன்றும் நடக்கவில்லை. அத்துடன் ஆஸ்திரேலிய அணி தன் அதிரடி ஆட்டத்தால் பல சாதனைகளை உடைத்து தள்ளியது.
ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகள் இடையே நடந்த உலகக்கோப்பை லீக் போட்டியில் ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் துவக்க வீரர் ட்ராவிஸ் ஹெட் அணிக்கு திரும்பி இருந்தார். வார்னர் ஏற்கனவே உச்சகட்ட பார்மில் இருக்கும் நிலையில், ஹெட் உடன் சேர்ந்து அதிரடி ஆட்டத்தை ஆட முடிவு செய்தார்.

வார்னர் - ஹெட் ஜோடி முதல் ஓவரில் இருந்தே பவுண்டரி மழை பொழிய ஆரம்பித்தது. மாட் ஹென்றி வீசிய மூன்றாவது ஓவரில் 22 ரன்கள் குவித்தது இந்த ஜோடி. அதன் பின் தொடர்ந்து அதிரடி ஆட்டம் ஆடியதால் நியூசிலாந்து அணி பந்துவீச்சாளர்களை மாற்றிப் பார்த்தது. ஆனால், எந்த பலனும் இல்லை.
முதல் 10 ஓவர்களில் ஆஸ்திரேலியா 118 ரன்களை குவித்தது. இந்த 10 ஓவர்களுக்குள் வார்னர் மற்றும் ஹெட் இருவரும் அரைசதம் கடந்தனர். வார்னர் 37 பந்துகளில் 65 ரன்களும், ஹெட் 25 பந்துகளில் 50 ரன்களும் குவித்து இருந்தனர். அதன் பின்னும் அவர்கள் அதிரடி தொடர்ந்தது. 15வது ஓவரில் எல்லாம் 150 ரன்களை எட்டியது ஆஸ்திரேலியா. ஆனால், 20வது ஓவரில் வார்னர் 81 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன் பின் ரன் குவிக்கும் வேகம் குறைந்தது.
எனினும், ஆஸ்திரேலியாவின் இதே பவர்பிளே திட்டத்தால் நியூசிலாந்து அணி நிலைகுலைந்து போனது. நியூசிலாந்து அணி முதல் 13 ஓவர்கள் அனைத்திலும் குறைந்தது ஒரு பவுண்டரியாவது கொடுத்தது. 2002இருந்து ஒரு டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அணி, பவுண்டரி கொடுக்காமல் ஒரு ஓவர் வீச அதிக ஓவர்களை எடுத்துக் கொண்ட வரிசையில் நியூசிலாந்து முதல் இடத்தை பிடித்தது.
மேலும், நியூசிலாந்து அணிக்கு எதிரான 8.3 ஓவரில் 100 ரன்களை எட்டி, அதிவேகமாக 100 ரன்களை குவித்த அணியானது ஆஸ்திரேலியா. உலகக்கோப்பையில் அதிவேகமாக 100 ரன்களை அடித்த இரண்டாவது அணி என்ற பெருமையும் ஆஸ்திரேலியா பெற்றது. முன்னதாக நியூசிலாந்து அணி 2015இல் இங்கிலாந்து அணிக்கு எதிராக 6.4 ஓவரில் 100 ரன்களை எட்டி இருந்தது.
மேலும், ஒட்டுமொத்த ஒருநாள் போட்டிகள் வரலாற்றில் மூன்றாவது அதிக முதல் 10 ஓவர் ஸ்கோரை பதிவு செய்தது ஆஸ்திரேலியா. முதல் 10 ஓவர்களில் இலங்கை 133 ரன்களும், வேஸ்ட் இண்டீஸ் 119 ரன்களும் எடுத்து முதல் இரண்டு இடங்களில் உள்ளன. ஆஸ்திரேலியா 118 ரன்களுடன் மூன்றாம் இடத்தில் உள்ளது.