தரம்சாலா: உலகக்கோப்பை தொடரில் களமிறங்கிய முதல் போட்டியிலேயே ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் டிராவிஸ் ஹெட் சதம் விளாசி சாதனை படைத்துள்ளார்.

உலகக்கோப்பை தொடரின் இன்றைய ஆட்டத்தில் சமபலம் வாய்ந்த ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் டாம் லேதம் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி தரப்பில் கேமரூன் க்ரீன் நீக்கப்பட்டு, காயம் காரணமாக ஓய்வில் இருந்த டிராவிஸ் ஹெட் சேர்க்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து டேவிட் வார்னர் - டிராவிஸ் ஹெட் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். முதல் ஓவரிலேயே 2 பவுண்டரிகளை விளாசி வார்னர் அதிரடியாக தொடங்கினார். தொடர்ட்ந்து 3வது ஓவரில் வார்னர் ஒரு சிக்ஸ், டிராவிஸ் ஹெட் 2 சிக்சர்கள் விளாசி நியூசிலாந்து பந்துவீச்சை சிதறடித்தனர். இவர்களின் அதிரடி காரணமாக 4.1 ஓவர்களிலேயே ஆஸ்திரேலிய அணி 50 ரன்களை எட்டியது.
தொடர்ந்து சிறப்பாக ஆடிய வார்னர் 28 பந்துகளில் அரைசதம் அடிக்க, இன்னொரு பக்கம் கம்பேக் போட்டியில் டிராவிஸ் ஹெட் 25 பந்துகளில் அரைசதம் அடித்து மிரட்டினார். நடப்பு உலகக்கோப்பை தொடரில் குறைந்த பந்துகளில் அரைசதம் அடித்த வீரர் என்ற பெருமையையும் டிராவிஸ் ஹெட் பெற்றார். இதன்பின்னர் இருவரின் அதிரடியும் உச்சத்திற்கு சென்றது.
10 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோர் 118 ரன்களாக இருந்தது. ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றிலேயே முதல் 10 ஓவர்களில் அடிக்கப்பட்ட 3வது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். பின்னர் அதிரடியாக வார்னர் ஹாட்ரிக் சதம் விளாசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 82 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதன்பின் ஆட்டத்தை கட்டுப்பாட்டை டிராவிஸ் ஹெட் எடுத்து கொண்டார்.
இதன்பின் பவுண்டரியும், சிக்சருமாய் விளாசிய டிராவிஸ் ஹெட், 6 சிக்ஸ் மற்றும் 10 பவுண்டரி உட்பட 59 பந்துகளில் சதம் விளாசி அசத்தியுள்ளார். ஆஸ்திரேலிய அணியில் குறைந்த பந்துகளில் விளாசப்பட்ட சதங்கள் பட்டியலில் 4வது அதிவேக சதம் இதுவாகும். உலகக்கோப்பை தொடருக்கு முன் காயம் காரணமாக ஒரு மாதம் ஓய்வில் இருக்க வேண்டிய நிலைக்கு டிராவிஸ் ஹெட் தள்ளப்பட்டார். இருப்பினும் டிராவிஸ் ஹெட் மீது நம்பிக்கை வைத்து, இரண்டாம் பாதி ஆட்டத்திற்கு தேவைப்படுவார் என்று ஆஸ்திரேலிய அணி நிர்வாகம் இவரை தேர்வு செய்தது.

சரியாக இரண்டாம் பாதியின் முதல் போட்டியில் களமிறங்கி, முதல் போட்டியிலேயே சதம் விளாசி இருக்கிறார் டிராவிஸ் ஹெட். இதன் மூலம் ஆஸ்திரேலியா அணியின் அட்டாக் வேற லெவலுக்கு உயர்ந்துள்ளது. இவரின் வரவால், ஐசிசி தொடர்களில் ஆஸ்திரேலிய அணி தாக்குதல் பாணி ஆட்டம் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.