சிட்னி: பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் பாபர் அசாம் 3வது முறையாக பேட் கம்மின்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறி இருக்கிறார்.
அண்மை காலங்களில் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் பாபர் அசாம் பேட்டிங் ஃபார்மின்றி தவித்து வருகிறார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணியின் முகமாக உள்ள பாபர் அசாம் பல்வேறு சாதனைகளையும் படைத்துள்ளார். ஆனால் ஆசிய கோப்பைக்கு பின் பாபர் அசாம் பேட்டிங்கில் தடுமாறி வருகிறார். இதனிடையே கேப்டன்சி பதவி பறிபோனதும் அவரின் பேட்டிங்கை உலுக்கியுள்ளதாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த தொடரின் முதல் 2 போட்டிகளிலும் ஆஸ்திரேலியா அணி வென்று தொடரை கைப்பற்றியது. இந்த நிலையில் ஆறுதல் வெற்றியையாவது பாகிஸ்தான் பெறுமா என்ற கேள்வியுடன் 3வது டெஸ்ட் போட்டியில் களமிறங்கியது. இதன் பின் முதலில் பேட்டிங் ஆடி வரும் பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களான அப்துல்லா சஃபீக் மற்றும் சயீம் அயூப் இருவரும் டக் அவுட்டாகி வெளியேறினர்.
இதன்பின் களமிறங்கிய பாபர் அசாம் கேப்டன் ஷான் மசூத் உடன் இணைந்து பாகிஸ்தான் அணியின் ஸ்கோரை உயர்த்தினார். சிறப்பாக ஆடிய அவர் சில பவுண்டரிகளை மிகச்சிறப்பாக விளாசினார். இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் அட்டாக்கில் வந்தார். அப்போது 26 ரன்கள் எடுத்திருந்த பாபர் அசாம், கம்மின்ஸ் வீசிய 2வது ஓவரிலேயே ஆட்டமிழந்து வெளியேறினார். இந்த டெஸ்ட் தொடரில் கம்மின்ஸ் பந்துவீச்சில் மட்டும் பாபர் அசாம் 3வது முறையாக ஆட்டமிழந்து வெளியேறியுள்ளார்.
முதல் 2 போட்டிகளில் பாகிஸ்தான் அணியின் பாபர் அசாம் 1, 41, 21 மற்றும் 14 என்று மொத்தமாக 77 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளார். கடைசி போட்டியிலாவது சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில், மீண்டும் 26 ரன்களுடன் வெளியேறி இருக்கிறார். இதுவரை ஆஸ்திரேலியா மண்ணில் 8 போட்டிகளில் விளையாடியுள்ள பாபர் அசாம் மொத்தமாக 381 ரன்களை 25.35 என்ற பேட்டிங் சராசரியுடன் சேர்த்திருக்கிறார்.
ஆஸ்திரேலிய மண்ணில் ஒரு சதம் மற்றும் ஒரு அரைசதம் அடித்திருந்தாலும், 8 முறை 20 ரன்களை கூட எடுக்க முடியாமல் ஆட்டமிழந்துள்ளார். கடந்த ஆண்டில் மட்டும் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 202 ரன்களை மட்டுமே சேர்த்த பாபர் அசாம், ஒருமுறை கூட அரைசதம் அடிக்கவில்லை. அது 2024லும் தொடர்ந்து வருவது பாகிஸ்தான் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் பாபர் அசாம் மீண்டும் சொதப்பியதை இந்திய ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.