தாயை இழந்த துக்கம்.. ஜாம்பவான் கையால் அறிமுகம்.. தாங்க முடியாமல் கண் கலங்கிய 16 வயது வீரர்!
Recommended Video
பெர்த் : ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணியில் 16 வயது இளம் வீரர் நசீம் ஷா அறிமுகம் ஆக உள்ளார்.
இந்த சுற்றுப்பயணத்தின் போது, கடந்த சில நாட்கள் முன்பு நசீம் ஷாவின் தாயார் இறந்து விட்டார்.
இந்த நிலையில், வேகப் பந்துவீச்சு ஜாம்பவான் ஆன வக்கார் யூனிஸ், நசீம் ஷாவுக்கு அறிமுக டெஸ்ட் போட்டிக்கான தொப்பியை வழங்கினார். அப்போது நசீம் ஷா உணர்ச்சிவசப்பட்டார்.

இளம் வீரர்கள்
பாகிஸ்தான் அணி தொடர்ந்து தோல்விப் பாதையில் சென்று கொண்டு இருக்கும் நிலையில், டெஸ்ட் போட்டிகளில் வெற்றி வாகை சூட முடிவு செய்த அந்த அணி, அனுபவ வீரர்களைக் காட்டிலும் இளம் வீரர்கள் தான் சரி என்ற முடிவுக்கு வந்து இரண்டு 16 வயது வீரர்களை ஆஸ்திரேலியா அழைத்துச் சென்றது.

முதல் தர போட்டி
அதில் ஒருவர் தான் நசீம் ஷா. 16 வயதான நசீம் ஷா 7 முதல் தர போட்டிகளில் 27 விக்கெட்கள் வீழ்த்தி இருக்கிறார். அதில் இரண்டு போட்டிகளில் 5 விக்கெட் வீழ்த்தி இருக்கிறார். அவரது பந்துவீச்சு சராசரி 16.66 மட்டுமே.

அதிக எதிர்பார்ப்பு
இந்த நிலையில், இந்த இளம் வீரர் வேகப் பந்துவீச்சுக்கு சாதகமான ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் கலக்குவாரா? என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இதற்கு இடையே அந்த சோக சம்பவம் நடந்தது.

தாயார் இறந்தார்
நசீம் ஷா ஆஸ்திரேலியாவில் இருக்க, அவர் தாயார் பாகிஸ்தானில் இயற்கை எய்தினார். அவரது இறுதிச் சடங்கு முடியும் முன்னர், குறித்த நேரத்திற்குள் தன்னால் பாகிஸ்தான் செல்ல முடியாது என்பதால் நசீம் ஷா நாடு திரும்பவில்லை.

பயிற்சிப் போட்டி
மனதில் துக்கம் இருந்தாலும், சில நாட்கள் கழித்து டெஸ்ட் தொடருக்கு முன் நடந்த பயிற்சிப் போட்டியில் பங்கேற்ற நசீம் ஷா பெர்த் ஆடுகளத்தை சரியாக பயன்படுத்திக் கொண்டார். பவுன்ஸ் மற்றும் ஷார்ட் பால் வீசி அசரடித்தார்.

தடுமாறிய பேட்ஸ்மேன்கள்
குறிப்பிட்ட ஒரு ஸ்பெல்லில் தொடர்ந்து ஷார்ட் பால் வீசி, ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை திணற வைத்தார். மார்க்ஸ் ஹாரிஸ் விக்கெட்டை வீழ்த்திய அவர், உஸ்மான் கவாஜா விக்கெட்டை, வீழ்த்தாவிட்டாலும், தன் பவுன்ஸ் பந்துவீச்சால் சின்னாபின்னமாக்கினார்.

அணியில் சேர்ப்பு
அச்சுறுத்தும் அவரது பந்துவீச்சை கண்ட பாகிஸ்தான் அணி நிர்வாகம், அவருக்கு முதல் டெஸ்ட் போட்டியில் வாய்ப்பு அளித்தது. ஆஸ்திரேலியா இவரை எப்படி சமாளிப்பது என்பது குறித்து அளித்த பேட்டிகளே, பாகிஸ்தான் அணிக்கு கிடைத்த முதல் வெற்றியாக இருந்தது.

தொப்பி அளித்த வக்கார் யூனிஸ்
முதல் டெஸ்ட் போட்டிக்கு முன், தன் முதல் சர்வதேச போட்டியில் அறிமுகம் ஆகும் நசீம் ஷாவுக்கு தொப்பியை வழங்கினார் பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் வக்கார் யூனிஸ்.

கண்ணீர் விட்ட நசீம் ஷா
இளம் வயதில் அறிமுகம் ஆவது ஒருபுறம், தன் தாயை இழந்த துக்கம் ஒருபுறம், வக்கார் யூனிஸ் போன்ற ஜாம்பவான் கையால் அறிமுகம் ஆவது ஒருபுறம் என உணர்ச்சிவசப்பட்ட நசீம் ஷா கண் கலங்கினார்.

சக வீரர்கள் ஆறுதல்
ஷஹீன் ஷா அப்ரிடியை கட்டிப் பிடித்து அழுத நசீம் ஷாவுக்கு சக வீரர்கள் ஆறுதல் கூறினர். அவரது இளம் வயது அறிமுகத்தை பாராட்டி, அவரை தட்டிக் கொடுத்தனர். ஆஸ்திரேலிய மண்ணில் சர்வதேச கிரிக்கெட் ஆடும் இளம் வயது வீரர் நசீம் ஷா தான் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications