பெர்த் : முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணியை நசுக்கி இமாலய வெற்றியை பதிவு செய்தது ஆஸ்திரேலியா.
முதல் இன்னிங்க்ஸில் கூட கொஞ்சம் போராடிய பாகிஸ்தான் அணி, இரண்டாவது இன்னிங்க்ஸில் வெற்றிக்கு 450 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் மொத்தமாக சரணடைந்தது.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 487 ரன்கள் குவித்தது. டேவிட் வார்னர் 164 ரன்கள் குவித்தார். மிட்செல் மார்ஷ் 90 ரன்கள் குவித்தார். பாகிஸ்தான் அணியின் ஆமிர் ஜமால் 6 விக்கெட் வீழ்த்தி இருந்தார்.

அடுத்து பாகிஸ்தான் அணி தன் முதல் இன்னிங்க்ஸில் 271 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக இமாம் உல் ஹக் 62 ரன்கள் எடுத்து இருந்தார். அப்துல்லா ஷபிக் 42 ரன்கள் எடுத்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாபர் ஆசாம் 21 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஆஸ்திரேலியாவின் ஆறு பந்துவீச்சாளர்களும் விக்கெட் வீழ்த்தி இருந்தனர்.
அடுத்து ஆஸ்திரேலியா தன் இரண்டாவது இன்னிங்க்ஸில் 5 விக்கெட் இழப்பிற்கு 233 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது. உஸ்மான் கவாஜா 90, மிட்செல் மார்ஷ் 63* ரன்கள் எடுத்தனர். பாகிஸ்தான் அணிக்கு 450 ரன்கள் என்ற கடினமான வெற்றி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.
நான்காம் நாள் ஆட்டத்தில் பேட்டிங் செய்வது கடினம் என்ற போதும் பாகிஸ்தான் வீரர்கள் கொஞ்சம் கூட ரன் சேர்க்க முயற்சி செய்யவில்லை. தோல்வியை ஒப்புக் கொண்டது போல வரிசையாக விக்கெட்டை இழந்து நடையைக் கட்டினர். சவுது ஷகீல் அதிகபட்சமாக 24 ரன்கள் எடுத்தார். பாபர் ஆசாம் 14 ரன்கள் மட்டுமே எடுத்தார். பாகிஸ்தான் அணி 89 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலிய அணி 360 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பதிவு செய்தது.