உலகக்கோப்பை உங்களுக்குன்னு எழுதி வச்சுருக்கா.. உறைந்து போன ஆஸ்திரேலியா.. தென்னாப்பிரிக்கா சம்பவம்
துபாய்: 2024 மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில் நடந்த முதல் அரை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணியை, தென்னாப்பிரிக்க மகளிர் அணி வீழ்த்தி கிரிக்கெட் உலகை மிரள வைத்தது. கடைசி மூன்று முறையும் ஆஸ்திரேலியா மகளிர் அணி தான் மகளிர் டி20 உலக கோப்பையை வென்று இருந்தது.
ஹாட்ரிக் வெற்றி பெற்ற சாம்பியன் அணியை அரை இறுதியில் வீழ்த்தி இருக்கிறது தென்னாப்பிரிக்கா. மேலும், ஆஸ்திரேலிய மகளிர் அணி கடந்த 2009 டி20 உலகக் கோப்பை முதல் ஒவ்வொரு டி20 உலகக் கோப்பை அரை இறுதிப் போட்டிகளிலும் விளையாடி உள்ளது. அதில் 2009 இல் மட்டுமே ஆஸ்திரேலியா தோல்வி அடைந்து இருந்தது.

அதன் பின் 2010, 2012, 2014, 2016, 2018 மற்றும் 2022 என மொத்தம் ஆறு டி20 உலகக் கோப்பை அரை இறுதிகளில் ஆஸ்திரேலிய மகளிர் அணி தொடர்ந்து வெற்றி பெற்று இருந்தது. மேலும், கடைசியாக தான் ஆடிய 15 டி20 உலகக் கோப்பை போட்டிகளில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று இருந்தது. மகளிர் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா அசாதாரணமான ஆதிக்கத்தை செலுத்தி வந்தது.
தொடர்ந்து 15 உலகக் கோப்பை போட்டிகளில் வெற்றி பெற்ற அணியை அரை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா வீழ்த்தி அதிர்ச்சி அளித்து இருக்கிறது. இதன் மூலம், "உலகக் கோப்பையை உங்கள் பெயருக்கே எழுதி வைக்கவில்லை" என ஆணித்தரமாக ஆஸ்திரேலியாவுக்கு கூறி இருக்கிறது தென்னாப்பிரிக்கா.
இந்த முதல் அரை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியில் பெத் மூனி 42 பந்துகளில் 44 ரன்களும், டகிலா மெக்கிராத் 33 பந்துகளில் 27 ரன்களும், எலிஸ் பெர்ரி 23 பந்துகளில் 31 ரன்களும், போப் லிட்ச்ஃபீல்டு 9 பந்துகளில் 16 ரன்களும் எடுத்தனர். ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் எடுத்தது.
அடுத்து தென்னாப்பிரிக்கா அணி சேசிங் செய்தது. அந்த அணி 135 ரன்கள் என்ற இலக்கை எட்டுவது சிரமம் என்று பலரும் எண்ணினர். ஆனால், துவக்க வீராங்கனை லாரா உல்வார்ட் நிலையாக நின்று ஆடினார். மற்றொரு துவக்க வீராங்கனை டாஸ்மின் பிரிட்ஸ் 15 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
மூன்றாம் வரிசையில் இறங்கிய ஆனேக் போஸ்ஷ் அதிரடி ஆட்டம் ஆடினார். அவர் 48 பந்துகளில் 74 ரன்கள் சேர்த்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். கேப்டன் லாரா உல்வார்ட் 37 பந்துகளில் 42 ரன்கள் சேர்த்து 15வது ஓவரில் ஆட்டம் இழந்தார். தென்னாப்பிரிக்க அணி 17.2 ஓவர்களில் 135 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன் மூலம் தென்னாப்பிரிக்கா 2024 மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருக்கிறது. ஹாட்ரிக் சாம்பியன் ஆஸ்திரேலியா அரை இறுதியுடன் தொடரில் இருந்து வெளியேறியது. மற்றொரு அரை இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோத உள்ளன. அந்தப் போட்டி இன்று (அக்டோபர் 18) இரவு 7:30 மணிக்கு நடைபெற உள்ளது.


Click it and Unblock the Notifications