ODI சரித்திரத்தில் இப்படியொரு தோல்வியை தென்னாப்பிரிக்கா சந்தித்ததே இல்லை.. ஆஸ்திரேலியா ரெக்கார்டு
மெக்கே: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் புதிய வரலாறு படைத்துள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 276 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியைப் பதிவு செய்ததன் மூலம், தென்னாப்பிரிக்க அணியை 250 ரன்களுக்கும் அதிகமான வித்தியாசத்தில் வீழ்த்திய உலகின் முதல் அணி என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளது.
மெக்கே நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, ரன் மலையைக் குவித்தது. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் அந்த அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 431 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 432 ரன்கள் என்ற இமாலய இலக்கைத் துரத்திய தென்னாப்பிரிக்க அணி, ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சில் கதிகலங்கி, சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது.

இறுதியில், அந்த அணி 24.5 ஓவர்களில் வெறும் 155 ரன்களுக்குள் சுருண்டு படுதோல்வியை சந்தித்தது. இந்த வெற்றியின் நாயகனாக இளம் சுழற்பந்து வீச்சாளர் கூப்பர் கானலி ஜொலித்தார். அவர் 6 ஓவர்கள் வீசி வெறும் 22 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
புதிய வரலாற்று சாதனைகள்
உலக சாதனை: 54 வருட ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில், தென்னாப்பிரிக்க அணி 250+ ரன்கள் வித்தியாசத்தில் தோற்பது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன் எந்த அணியும் அவர்களை இவ்வளவு பெரிய வித்தியாசத்தில் வீழ்த்தியதில்லை.
ஆஸ்திரேலியாவின் சாதனை: இது ஆஸ்திரேலியாவின் இரண்டாவது மிகப்பெரிய ஒருநாள் வெற்றியாகும். மேலும், சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய ஒருநாள் வெற்றி இதுவாகும். இதற்கு முன், 2015 உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தானை 275 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதே சாதனையாக இருந்தது.
தென்னாப்பிரிக்காவின் மோசமான தோல்வி: இதற்கு முன்பு, 2023 உலகக் கோப்பையில் இந்தியாவிற்கு எதிராக 243 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றதே தென்னாப்பிரிக்காவின் மிகப்பெரிய தோல்வியாக இருந்தது. தற்போது அந்த சோகமான சாதனையை ஆஸ்திரேலியா முறியடித்துள்ளது.
இந்தியாவுடன் சமநிலையில் ஆஸ்திரேலியா:
ஒருநாள் போட்டிகளில் 250+ ரன்கள் வித்தியாசத்தில் அதிக வெற்றிகளைப் பெற்ற அணிகளின் பட்டியலில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் தற்போது தலா 4 வெற்றிகளுடன் முதலிடத்தில் சமநிலையில் உள்ளன. ஒட்டுமொத்தமாக ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வென்ற சாதனை இந்திய அணியின் வசம் உள்ளது (2023-ல் இலங்கைக்கு எதிராக 317 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி).


Click it and Unblock the Notifications