மெக்காய்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 276 ரன்கள் வித்தியாசத்தில் பெரும் தோல்வியை சந்தித்தது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா 1க்கு 2 என்ற கணக்கில் தொடரை முடித்தது. மேலும் தங்கள் மண்ணில் ஒரு ஒருநாள் தொடரில் ஓயிட்வாஷ் செய்யப்படாத அணி என்ற சாதனையை தக்கவைத்துக்கொண்டது.
மேக்கேயில் உள்ள கிரேட் பேரியர் ரீஃப் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்து. 50 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு அந்த அணி 431 ரன்கள் என்ற ஸ்கோரை எட்டியது. இது ஆஸ்திரேலியாவின் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இரண்டாவது மிக உயர்ந்த ஸ்கோராகும்.

19 ஆண்டுகளுக்கு முன்பு தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட 434/4 என்ற ஸ்கோருக்கு அடுத்தபடியாக இது அமைந்தது. டிராவிஸ் ஹெட் 142 ரன்களும், மிட்செல் மார்ஷ் 100 ரன்களும், கேமரூன் கிரீன் 55 பந்துகளில் 118 ரன்கள் எடுத்தனர். இந்த மூவரின் சதங்கள், ஒரு ஒருநாள் போட்டியில் முதல் மூன்று பேட்ஸ்மேன்கள் சதமடித்த இரண்டாவது நிகழ்வாகும்.
அலெக்ஸ் கேரி 37 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து இன்னிங்ஸை மேலும் பலப்படுத்தினார்.ஹெட் மற்றும் மார்ஷ் 250 ரன்கள் என்ற நான்காவது மிக உயர்ந்த தொடக்க பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர், இது ஆஸ்திரேலியாவுக்கு வலுவான அடித்தளத்தை அமைத்தது. கிரீன் மற்றும் கேரியின் மூன்றாவது விக்கெட் கூட்டணி 13.3 ஓவர்களில் 164 ரன்கள் சேர்த்து, கடைசி 10 ஓவர்களில் 126 ரன்களை குவித்தது.
தென்னாப்பிரிக்காவின் பந்துவீச்சு, குறிப்பாக ககிசோ ரபாடா மற்றும் லுங்கி என்ஜிடி இல்லாதது பெரும் பின்னடைவை சந்தித்தது. 432 ரன்கள் என்ற இலக்கை துரத்திய தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களின் தாக்குதலுக்கு முன்பு 155 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இது அவர்களின் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ரன்கள் அடிப்படையில் மிகப்பெரிய தோல்வியாகும்.
இதில் டோனி டி சோர்சி மற்றும் டெவால்ட் ப்ரேவிஸ் 49 ரன்கள் எடுத்து சிறந்த கூட்டணியை அமைத்தாலும், மற்ற பேட்ஸ்மேன்கள் சரியாக செயல்படவில்லை. இதில் பிரவீஸ் 5 சிக்சர்களை விளாசினார்.ஆஸ்திரேலியாவின் இளம் வீரர் கூப்பர் கோன்னோலி, 22 வயது இரண்டு நாட்களில், ஒரு ஒருநாள் போட்டியில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய மிக இளைய ஆஸ்திரேலிய வீரராக பதிவு செய்தார்.
ஆடம் ஸம்பாவும் ஒரு விக்கெட்டை எடுக்க, 25 ஓவர்களில் தென்னாப்பிரிக்காவை முடித்தார்.இந்த வெற்றி ஆஸ்திரேலியாவுக்கு ஆறுதல் அளித்தாலும், தொடரை 2-1 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்கா வென்றது. இந்த வெற்றி குறித்து பேசிய டிராவிஸ் ஹெட், "இந்தத் தொடரில் நான் விரும்பிய அளவு ரன்கள் எடுக்கவில்லை. மிட்செல்லுடன் இணைந்து பேட்டிங் செய்வது மகிழ்ச்சி அளித்தது. பகல் நேரத்தில் நல்ல விக்கெட்டில் விளையாடும்போது, ரன்கள் எடுக்க முடியும் என்பது எங்களுக்குத் தெரியும்." என்று கூறினார்.