ராவல்பிண்டி: ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு மழையால் அதிர்ஷ்டம் அடித்து உள்ளது. அந்த அணிகளின் அரையிறுதி வாய்ப்பு எளிதாக மாறி உள்ளது. 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் மழையால் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான போட்டி ரத்து செய்யப்பட்டது.
இதை அடுத்து இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரின் புள்ளி பட்டியலில் தற்போது தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு ஒரு நன்மை ஏற்பட்டு இருக்கிறது.

தற்போது குரூப் பி பிரிவில் தென்னாப்பிரிக்கா அணி இரண்டு போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றி மற்றும் மழையால் கிடைத்த ஒரு புள்ளியுடன் 3 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா இரண்டு போட்டிகளில் ஒரு வெற்றி உடன் மூன்று புள்ளிகளைப் பெற்று நெட் ரன் ரேட் குறைவாக இருப்பதால் இரண்டாவது இடத்தில் உள்ளது.
அதே சமயம் குரூப் பி பிரிவில் உள்ள இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் தலா ஒரு போட்டியில் மட்டும் விளையாடி அதில் தோல்வி அடைந்து புள்ளிகள் எதுவும் பெறாமல் மூன்று மற்றும் நான்காவது இடங்களில் உள்ளன.
தற்போது ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு குரூப் சுற்றில் ஒரு போட்டி மட்டுமே மீதம் உள்ளது. அந்த ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்றாலும் இந்த இரண்டு அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறிவிடும்.
மாறாக தற்போது தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான போட்டி முழுமையாக நடைபெற்று இருந்தால் இந்த இரு அணிகளில் ஒரு அணி தோல்வி அடைந்திருக்கும். மற்றொரு அணி வெற்றி பெற்று நான்கு புள்ளிகளுடன் இருக்கும். அப்போது தோல்வி அடைந்த அணி மற்றொரு போட்டியில் வெற்றி பெற்றாலும் நெட் ரன் ரேட்டை வைத்து தான் அரை இறுதிக்கு முன்னேறி இருக்க முடியும். அது சிக்கலாக மாறி இருக்கக் கூடும்.
ஆனால் தற்போது மழை பெய்து, போட்டி கைவிடப்பட்டு தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு தலா ஒரு புள்ளி பிரித்து வழங்கப்பட்டதால் இரு அணிகளும் மூன்று புள்ளிகளுடன் உள்ளன. எனவே, அடுத்த போட்டியில் தென் ஆப்பிரிக்கா இங்கிலாந்து அணியையும், ஆஸ்திரேலியா ஆப்கானிஸ்தான் அணியையும் வீழ்த்தினால் இரு அணிகளும் எளிதாக அரையிறுதிக்கு முன்னேறிவிடும்.
இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் பலவீனமாக இருப்பதால் அந்த இரு அணிகளையும் வீழ்த்துவதும் எளிதான விஷயமாகவே இருக்கும். இதுவரை மழையால் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பலமுறை பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால் முதல் முறையாக மழையால் இந்த இரண்டு அணிகளுக்கும் அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. எனவே இந்த இரண்டு அணிகளைப் பொறுத்தவரை மழை எதிரியல்ல, அதிர்ஷ்ட தேவதை.