SL vs AUS: 174 ரன்கள் வித்தியாசத்தில்.. ஆஸ்திரேலியா படுதோல்வி.. பிரம்மாண்ட வெற்றி பெற்ற இலங்கை
கொழும்பு: இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 174 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்துள்ளது. 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்னதாக ஆஸ்திரேலிய அணி இலங்கை அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது.
இந்த நிலையில், ஆஸ்திரேலிய அணி இந்த தொடரின் இரண்டு போட்டிகளிலும் தோல்வியைச் சந்தித்துள்ளது. முதல் போட்டியில் 49 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த ஆஸ்திரேலிய அணி, இரண்டாவது ஒருநாள் போட்டியில் 174 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்துள்ளது. சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கே தகுதி பெறாத இலங்கை அணியிடம் ஆஸ்திரேலியா அணி இந்த மோசமான தோல்வியை சந்தித்துள்ளது.

இந்தப் போட்டியில் இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் குசால் மெண்டிஸ் அபாரமாக ஆடி 101 ரன்கள் சேர்த்தார். நிஷான் மதுஷ்கா 51 ரன்கள் சேர்த்தார். கேப்டன் சரித் அசலங்கா 66 பந்துகளில் 78 ரன்கள் சேர்த்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார்.
ஜனித் லியனாகே கடைசி ஓவர்களில் அதிரடியாக ஆடினார். அவர் 21 பந்துகளில் 32 ரன்கள் சேர்த்தார். இலங்கை அணி 50 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 281 ரன்கள் எடுத்தது. அடுத்து பேட்டிங் செய்ய வந்த ஆஸ்திரேலியா அணி வரிசையாக விக்கெட்டுகளை இழந்தது.
அந்த அணியின் முன்னணி வீரர்களான டிராவிஸ் ஹெட் 18 ரன்களும், ஸ்டீவ் ஸ்மித் 29 ரன்களும், ஜோஷ் இங்கிலிஸ் 22 ரன்களும், கிளென் மேக்ஸ்வெல் ஒரு ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தனர். இதை அடுத்து ஆஸ்திரேலியா அணி 24.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 107 ரன்கள் மட்டுமே எடுத்தது. இலங்கை அணி 174 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பதிவு செய்தது.


Click it and Unblock the Notifications