AUS vs SL - இரட்டை சதம் விளாசிய உஸ்மான் கவாஜா.. 654 ரன்கள் குவித்த ஆஸ்திரேலியா.. இலங்கை தடுமாற்றம்
காலே : இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வலுவான நிலையில் இருக்கிறது. அந்த அணியின் தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா இரட்டை சதம் அடித்து அசத்தியிருக்கிறார். இரண்டு போட்டிகள் கொண்ட இந்த தொடரில் முதல் டெஸ்ட் போட்டி காலே நகரில் புதன் கிழமை தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் ஸ்மித் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதில் தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட், அரைசதம் அடிக்க,உஸ்மான் கவாஜா, ஸ்மித் ஜோடி ஆகியோர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை சேர்த்தனர்.

இதில் ஸ்மித் தன்னுடைய 35 வது சதத்தையும் உஸ்மான் கவாஜா, தன்னுடைய 16 ஆவது சதத்தையும் பூர்த்தி செய்தார். இந்த நிலையில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 330 ரன்கள் என்ற ஸ்கோருடன் இரண்டாவது நாள் ஆட்டத்தை ஆஸ்திரேலிய அணி தொடங்கியது. 104 ரன்கள் உடன் விளையாடிய ஸ்மித்,இரட்டை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் ஸ்மித் 141 ரன்களில் வெளியேறினார். எனினும் மறுமுனையில் அபாரமாக விளையாடிய கவாஜா இலங்கை அணியின் பந்துவீச்சுக்கு சிம்ம சொப்பனமாக நின்றார். இவருக்கு ஜோஸ் இங்கிலீஷ் நல்ல கம்பெனி கொடுத்தார். ஒருபுறம் நங்கூரம் பாய்ச்சி உஸ்மான் கவாஜா நிற்க, மறுபுறம் ஜோஷ் இங்கிலீஷ் அதிரடியாக விளையாடினார்.
பத்து பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்த ஜோஸ் இங்கிலீஷ் 94 பந்துகளில் 102 ரன்கள் எடுத்தார். மறுமுனையில் உஸ்மான் கவாஜா 352 பந்துகளை எதிர்கொண்டு 232 ரன்கள் விளாசினார். அண்மையில் நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் தொடரில் உஸ்மான் கவாஜா ஐந்து டெஸ்ட் போட்டிகளிலும் சேர்த்து 200 ரன்களை கூட தொடாத நிலையில் தற்போது ஒரே இன்னிங்ஸில் 232 ரன்கள் சேர்த்திருக்கிறார்.
வெப்ஸ்டர் 23 ரன்களில் ஆட்டமிழக்க ஆஸ்திரேலிய அணி ஆறு விக்கெட் இழப்பிற்கு 654 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்து வலுவான நிலையில் இருக்கின்றது. இலங்கை அணையின் பந்துவீச்சு தரப்பில் பிரபாத் ஜெயசூர்யா மற்றும் வெண்டர்சே ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications