அதிவேக டெஸ்ட் செஞ்சுரி.. அறிமுகப் போட்டியிலேயே மிரள வைத்த ஆஸ்திரேலிய வீரர் ஜோஷ் இங்லிஸ்
கல்லே: ஆஸ்திரேலியாவின் ஜோஷ் இங்லிஸ் தனது அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே சதம் அடித்து இருக்கிறார். அதிலும் டெஸ்ட் அறிமுகப் போட்டியில் அதிவேகமாக சதம் அடித்த இரண்டாவது வீரர் என்ற சாதனையையும் செய்து இருக்கிறார்.
இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்தப் போட்டியில் ஜோஷ் இங்லிஸ் ஐந்தாவது வரிசையில் பேட்டிங் செய்ய களம் இறங்கினார். 26 ஒருநாள் போட்டிகள் மற்றும் 29 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடிய அனுபவம் இவருக்கு கை கொடுத்தது. தனது டெஸ்ட் அறிமுகத்தில் தான் சந்தித்த முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து தனது இன்னிங்ஸைத் தொடங்கினார்.

ஜோஷ் இங்லிஸ் தனது அரை சதத்தை 51 பந்துகளில் கடந்தார். அப்போதே ஐந்து ஃபோர் அடித்து இருந்தார். பின்னர் 90 பந்துகளில் சதம் கடந்தார். அப்போது 10 ஃபோர் மற்றும் ஒரு சிக்ஸ் விளாசி இருந்தார். இதன் மூலம் அறிமுக டெஸ்டிலேயே அதிவேகமாக சதம் அடித்த ஆஸ்திரேலிய வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.
2013 இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் அறிமுகம் பெற்ற இந்திய வீரர் ஷிகர் தவான் 87 பந்துகளில் சதம் அடித்தார். அதுவே அதிவேக அறிமுக டெஸ்ட் சதமாக உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் வீரர் டிவைன் ஸ்மித் 93 பந்துகளில் அறிமுகப் போட்டியில் சதம் அடித்து இருந்தது இந்தப் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருந்தது.
அந்த சாதனையை ஜோஷ் இங்லிஸ் மூன்றாவது இடத்துக்கு தள்ளி இருக்கிறார். ஜோஷ் இங்லிஸ் 94 பந்துகளில் 102 ரன்கள் எடுத்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 108.51 ஆக இருந்தது. அறிமுக டெஸ்டில் அதிக ஸ்ட்ரைக் ரேட் வைத்த வீரர் என்ற பெருமையும் இவரையே சேரும். ஷிகர் தவான் தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் 187 ரன்கள் எடுத்தபோது 107.47 ஸ்ட்ரைக் ரேட் வைத்திருந்தார்.
ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் வலுவான தொடக்கம் பெற்றது. உஸ்மான் கவாஜா மற்றும் டிராவிஸ் ஹெட் முதல் விக்கெட்டுக்கு 92 ரன்கள் சேர்த்தனர். அடுத்து வந்த ஸ்டீவ் ஸ்மித் 10,000 டெஸ்ட் ரன்களை கடந்ததோடு 141 ரன்கள் குவித்தார்.
முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 330/2 ரன்கள் எடுத்திருந்தது. இரண்டாம் நாள் ஆட்டத்திலும் ஆஸ்திரேலிய வீரர்கள் ரன்களைக் குவித்தனர். கவாஜா தனது முதலாவது இரட்டை சதத்தைப் பூர்த்தி செய்தார். அவர் 232 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இங்லிஸும் சதம் விளாசினார். ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 654/6 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதுவே ஆசியாவில் ஆஸ்திரேலியாவின் அதிகபட்ச ஸ்கோர் ஆகும். பின்னர் விளையாடிய இலங்கை அணி ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை இழந்தது. இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் 44/3 என்ற நிலையில் இருந்தது.


Click it and Unblock the Notifications