கல்லே: இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் தனது 36 வது டெஸ்ட் போட்டி சதத்தை நிறைவு செய்தார். மேலும், இது அவரது 48 வது சர்வதேச சதமாகவும் அமைந்தது.
தான் ஆடிய கடைசி ஐந்து போட்டிகளில் மட்டும் அவர் நான்கு சதங்களை அடித்திருக்கிறார். இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் நான்காவது டெஸ்ட் போட்டிகளில் சதம் அடித்து இருந்தார் ஸ்டீவ் ஸ்மித். அதை தொடர்ந்து தற்போது இலங்கை அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் சதம் அடித்து இருக்கிறார்.

கல்லேவில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்து 257 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்தபோது 91 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து இருந்தது. அப்போது ஸ்டீவ் ஸ்மித் மற்றும் அலெக்ஸ் கேரி இணைந்து ரன் சேர்த்தனர். இருவருமே சதம் அடித்தனர்.
ஸ்டீவ் ஸ்மித் தனது 36 வது சதத்தை நிறைவு செய்த நிலையில் பல்வேறு சாதனைகளையும் செய்திருக்கிறார். ஆசிய மண்ணில் இது அவரது ஏழாவது டெஸ்ட் சதமாகும். இலங்கை மண்ணில் நான்கு சதங்களையும், இந்திய மண்ணில் மூன்று சதங்களையும் ஸ்மித் அடித்திருக்கிறார். இலங்கை மண்ணில் அதிக சதங்களை அடித்த வெளிநாட்டு பேட்ஸ்மேன்கள் பட்டியலில் அவர் முதல் இடத்தை பிடித்து இருக்கிறார்.
இலங்கையில் பிரையன் லாரா மற்றும் ஜோ ரூட் தலா மூன்று சதங்களை அடித்து இருக்கின்றனர். அவர்களை முந்தி இருக்கிறார் ஸ்டீவ் ஸ்மித். மேலும், டெஸ்ட் போட்டிகளில் அதிக சதம் அடித்த வீரர்களின் பட்டியலில் ஐந்தாவது இடத்தை ஜோ ரூட் மற்றும் ராகுல் டிராவிட் உடன் பகிர்ந்து கொண்டு உள்ளார்.
ஆசிய மண்ணில் அதிக சதம் அடித்த ஆஸ்திரேலிய வீரர்களின் பட்டியலில் ஆலன் பார்டரை முந்தி இருக்கிறார் ஸ்மித். பார்டர் ஆறு சதங்கள் அடித்து இருக்கும் நிலையில் ஸ்டீவ் ஸ்மித் தற்போது ஏழு சதங்களை அடித்து இருக்கிறார். இதுவரை 36 டெஸ்ட் சதங்கள் அடித்திருக்கும் ஸ்மித் எந்தெந்த நாடுகளில் எத்தனை சதங்களை அடித்திருக்கிறார் என்பது பற்றி பார்க்கலாம்.
ஆஸ்திரேலியாவில் 18 சதங்கள், இங்கிலாந்தில் 8 சதங்கள், இலங்கையில் 4 சதங்கள். இந்தியாவில் 3 சதங்கள். நியூசிலாந்தில் 1, தென்னாப்பிரிக்காவில் 1, மற்றும் வெஸ்ட் இண்டீஸ் 1 சதத்தை அடித்து இருக்கிறார் ஸ்டீவ் ஸ்மித். தற்போது கிரிக்கட் ஆடி வரும் வீரர்களில் அதிக சர்வதேச சதங்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் ரோஹித் சர்மாவுடன் மூன்றாவது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.
விராட் கோலி 81 சதம், ஜோ ரூட் 52 சதம் அடித்து முதல் இரண்டு இடங்களில் உள்ளனர். ஸ்டீவ் ஸ்மித் மற்றும் ரோஹித் சர்மா 48 சதங்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளனர். கேன் வில்லியம்சன் 46 சதங்கள் அடித்து ஐந்தாவது இடத்தில் இருக்கிறார்.
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 330 ரன்கள் சேர்த்து உள்ளது. ஸ்டீவ் ஸ்மித் 120 ரன்களுடனும், அலெக்ஸ் கேரி 139 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.