சிட்னி: சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி உள்ளிட்டோர் கூட செய்யாத பரிசோதனை முயற்சியை ஆஸ்திரேலியா அணியின் ஸ்டீவ் ஸ்மித் செய்யவுள்ளது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியோடு ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர தொடக்க வீரர் டேவிட் வார்னர் ஓய்வு பெற்றார். இதன்பின் ஆஸ்திரேலியா அணியில் டேவிட் வார்னரின் இடத்தை நிரப்பப் போகும் பேட்ஸ்மேன் யார் என்ற கேள்வி எழுந்தது. சில நாட்களாகவே ஆஸ்திரேலியா முன்னாள் வீரர்கள் பலரும் கேமரூன் க்ரீன், பேன்கிராஃப்ட் உள்ளிட்டோரை கூறி வந்தனர். ஆனால் திடீரென ஸ்டீவ் ஸ்மித்தை தொடக்க வீரராக களமிறக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியது.

ஏனென்றால் ஆஸ்திரேலியா அணியின் பேட்டிங் ஆர்டரில் முதுகெலும்பாக இருப்பவர் ஸ்டீவ் ஸ்மித். நம்பர் 3யில் ஆடி வந்த அவர், லபுஷேனின் வருகையால் நம்பர் 4க்கு மாறினார். பந்தை சேதப்படுத்திய புகார் காரணமாக ஓராண்டு தடை பெற்ற ஸ்டீவ் ஸ்மித், 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஆஷஸ் தொடரில் வேறு லெவல் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதன் காரணமாக ஸ்டீவ் ஸ்மித்தின் பேட்டிங் சராசரி 60ஐ கடந்தது. இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் நன்றாக விளையாடி வரும் ஸ்டீவ் ஸ்மித்தை வைத்து எதற்காக பரிசோதனை முயற்சி செய்ய வேண்டும் என்று பலரும் அறிவுரை கூறினர். தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலியா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் டேவிட் வார்னருக்கு பதிலாக மேட் ரென்ஷா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இருப்பினும் ஸ்டீவ் ஸ்மித் தொடக்க வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலியா தேர்வு குழு அறிவித்துள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் 8ல் ஸ்பின் பவுலராக தொடங்கிய ஸ்டீவ் ஸ்மித் பயணம், அடுத்தடுத்து பேட்ஸ்மேனாக உச்சம் பெற்றது. தற்போது 34 வயதிலும் தொடக்க வீரராக களமிறங்கி புதிய சவாலை ஏற்க தயாராகியுள்ளார். நம்பர் 4ல் ஆடிய வீரர்கள் பலரும் தங்களது பேட்டிங் வரிசையை அவ்வளவு எளிதாக மாற்றி கொள்ள மாட்டார்கள். சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, பிரையன் லாரா, ஜெயவர்தனே, இன்சமாம் உல் ஹக், பீட்டர்சன் உள்ளிட்டோர் வேறு வரிசையில் களமிறங்கியதில்லை.
ஆனால் ராகுல் டிராவிட் மட்டுமே இந்திய அணிக்காக மிடில் ஆர்டரில் இருந்து தொடக்க வீரராக கடைசி கால கிரிக்கெட் போட்டிகளில் விளையாடினார். ஏனென்றால் வெளிநாடுகளிலும் சரி, ஆசிய மண்ணிலும் சரி.. தொடக்க வீரராக களமிறங்கி விக்கெட்டை காப்பாற்றுவது அவ்வளவு எளிதல்ல. ஆனாலும் ஸ்டீவ் ஸ்மித் பயமின்றி தொடக்க வீரராக களமிறங்க தயாராகியுள்ளார். இதனால் ஸ்டீவ் ஸ்மித்தின் புதிய பாதை எப்படி அமையும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. பேட் கம்மின்ஸ் செய்த அத்தனை சோதனை முயற்சிகளும் வெற்றியில் முடிந்துள்ள நிலையில், இந்த சோதனை முயற்சி எப்படி அமையும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.