காபா : ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் 8 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வென்ற நிலையில், வர்ணனை செய்துகொண்டிருந்த பிரையன் லாரா ஆனந்த கண்ணீர் நெகிழ்ந்த வீடியோ ட்ரெண்டாகி வருகிறது.
ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி காபா மைதானத்தில் நடைபெற்றது. பகலிரவு டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா தோல்வியடைந்ததாக வரலாறு கிடையாது என்பதால், கங்காரு ரசிகர்கள் உற்சாகத்துடன் இருந்தனர். ஏனென்றால் ஆஸ்திரேலியா அணி வெற்றிபெற 216 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் 4வது நாள் தொடக்கத்தில் ஆஸ்திரேலிய அணி விக்கெட் இழப்பின்றி 13 ரன்களுடன் களமிறங்கியது. இதையடுத்து 113 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலியா அணி களத்தில் இருந்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஷாமார் ஜோசப் வந்து ஒட்டுமொத்த ஆட்டத்தையும் மாற்றினார். ஸ்டீவ் ஸ்மித் ஒருமுனையில் வெற்றிக்கு போராடிய போதும், மறுமுனையில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டது.
இதன் மூலம் ஆஸ்திரேலியா மண்ணில் 27 ஆண்டுகளுக்கு பின் வெஸ்ட் இண்டீஸ் அணி அபார வெற்றியை பெற்றது. அதுமட்டுமல்லாமல் காபா மைதானத்தின் கோட்டையை இந்திய அணிக்கு பின் மீண்டும் வெஸ்ட் இண்டீஸ் அணி மீண்டும் தகர்த்துள்ளது. காபா மைதானத்தில் ஆஸ்திரேலியா அணி தோல்வியடைவது 3வது முறையாகும்.
காபா மைதானத்தில் 1988ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா அணியை முதல்முறையாக வெஸ்ட் இண்டீஸ் அணி வீழ்த்தியது. அதன்பின் 2021ஆம் ஆண்டு ரிஷப் பண்ட் வெறித்தன ஆட்டத்தால் இந்திய அணி ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தியது. இதன்பின் தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணி சாதனை வெற்றியை பதிவு செய்துள்ளது.
இந்த வெற்றியின் போது ஜாம்பவான் வீரர் பிரையன் லாரா வர்ணனை செய்து கொண்டிருந்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணியின் வெற்றியை எண்ணி நெகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீருடன் இருந்தார். இதனை அருகில் நின்று பார்த்து கொண்டிருந்த ஆஸ்திரேலிய ஜாம்பவான் கில்கிறிஸ்ட், லாராவை கட்டியணைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.