மும்பை: உலகக்கோப்பைத் தொடருக்கான 18 பேர் கொண்ட உத்தேச அணியை ஆஸ்திரேலியா கிரிக்கெட் நிர்வாகம் அறிவித்துள்ளது.
அக்.5ஆம் தேதி முதல் நவ.19ஆம் தேதி வரை இந்தியாவில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கவுள்ளது. இதற்கான அட்டவணை ஜூன் 27ஆம் தேதி வெளியிடப்பட்டது. இருப்பினும் சில போட்டிகள் மட்டும் தேதிமாற்றம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மைதான பராமரிப்பு, பாதுகாப்பு உள்ளிட்ட ஏற்பாடுகளை பிசிசிஐ மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் 5 முறை உலகக்கோப்பை வென்ற ஆஸ்திரேலியா அணி, உலகக்கோப்பைத் தொடருக்கு தீவிரமாக தயாராகி வருகிறது. ஆஷஸ் தொடர் சர்ச்சைகளே இன்னும் ஆறாத நிலையில், உலகக்கோப்பைத் தொடருக்கான 18 வீர்ரகள் கொண்ட உத்தேச அணியை ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. அதில் நட்சத்திர வீரர் லபுஷேன் மட்டும் சேர்க்கப்படவில்லை.
ஐசிசி தொடர் என்றாலே ஆஸ்திரேலிய அணியை போல் வேறு யாரும் செயல்பட முடியாது. அதற்கேற்ப ஆளுக்கு முந்தி உத்தேச அணியை ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. ஆனால் இன்னொரு பக்கம் உலகக்கோப்பைக்கான உத்தேச அணியை மட்டுமல்லாமல் இம்மாத இறுதியில் தொடங்கவுள்ள ஆசியக் கோப்பைக்கான அணியை கூட பிசிசிஐ அறிவிக்காமல் உள்ளது.
இந்திய அணி நட்சத்திர வீரர்களின் காயம், ஃபார்மில்லாத பேட்ஸ்மேன்கள் ஆகியவையே பிசிசிஐ ஆசியக் கோப்பைக்கான அணியை அறிவிக்காமல் இருக்க காரணமாக பார்க்கப்படுகிறது. இதனால் பணம் மற்றும் அதிகாரத்தை மட்டும் வைத்துக் கொண்டு பிசிசிஐ தூங்கிக் கொண்டிருப்பதாகவும், மூளையை பயன்படுத்தி வீரர்களை தயார் செய்வதில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து நிர்வாகங்களிடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று ரசிகர்கள் விமர்சிக்க தொடங்கியுள்ளனர்.