சிட்னி: ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் முத்தரப்பு கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் இங்கிலாந்தை... விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றியை ருசித்தது ஆஸ்திரேலியா.
இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய நாடுகள் பங்கேற்கும் முத்தரப்பு கிரிக்கெட் தொடர் ஜனவரி 16ம் தேதி முதல் பிப்ரவரி 1ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு அணிகளும் பிற அணியோடு 2 லீக் ஆட்டங்களில் மோதும் வகையிலும், அதில் அதிக புள்ளிகள் எடுக்கும் இரு அணிகள் இறுதி போட்டியில் மோதும் வகையிலும் போட்டி அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி சிட்னியில் இன்று முதல் போட்டி நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் பலப்பரிட்சை நடத்தின. டாஸ் ஜெயித்த இங்கிலாந்து முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆனால், இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஸ்டார்க் வீசிய முதல் ஓவரிலேயே 2 விக்கெட்டை இழந்தது இங்கிலாந்து.
ஸ்டார்க் வீசிய அந்த ஓவரில் முதல் பந்தில் இயான் பெல்லும், 3வது பந்தில் ஜேம்ஸ் டெய்லரும் எல்.பி.டபிள்யூ முறையில் டக் அவுட் ஆனார்கள். ரன் கணக்கை தொடங்காமலேயே 2 விக்கெட்டை இங்கிலாந்து இழந்தது.
அதன்பின் ரூட் 5 ரன்னிலும், மொய்ன் அலி 22 ரன்னிலும் நடையை கட்டினர். அப்போது ஸ்கோர் 4 விக்கெட்டுக்கு 33 ரன் (8.3 ஓவர்) ஆக இருந்தது. அதற்கு பிறகு ஜோடி சேர்ந்த கேப்டன் மார்கன்- ரவி போபாரா நிதானமாக விளையாடினர். போபாரா 13 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேற, அவரைத் தொடர்ந்து களமிறங்கிய பட்லரும் 28 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.
மறுமுனையில் நிதானமாக விளையாடிய மோர்கன், 136 பந்துகளில் 121 ரன்கள் எடுத்து அசத்தினார். ஆனால் மறுமுனையில் எந்த ஒரு பேட்ஸ்மேனும் கம்பெனி கொடுக்காத நிலையில், இங்கிலாந்து 47.5 ஓவர்களில், 234 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. ஆஸி.தரப்பில் 42 ரன்களை விட்டுக்கொடுத்து ஸ்டார்க் 4 விக்கெட்டுகளை எடுத்தார்.
2வதாக பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா தொடக்கம் முதல் அதிரடியை காண்பித்தது. இருப்பினும் ஆரோன் பிஞ்ச் 15 ரன்களிலும், ஷேன் வாட்சன் 16 ரன்களிலும், ஸ்டீவ் ஸ்மித் 37 ரன்களிலும், கேப்டன் ஜார்ஜ் பெய்லி 10 ரன்களிலும், மேக்ஸ்வெல் ரன் ஏதும் எடுக்காமலும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இருப்பினும் மறுபக்கம் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் நங்கூரம் போட்டு களத்தில் நின்றதால் ஆஸ்திரேலியா தாக்குப்பிடித்தது.
மறுபுறம் விக்கெட்டுகள் சரிவதை பற்றி கவலைப்படாத வார்னர் தனது வழக்கமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 115 பந்துகளில் 127 ரன்களை குவித்து, கிறிஸ் வோகேஸ் பந்து வீச்சில் பெல்லிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இறுதியில் 39.5 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் இழப்புக்கு 235 ரன்கள் எடுத்து, 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது. ஜேம்ஸ் பால்க்னர் 6 ரன்களுடனும், ஸ்டார்க் ரன் ஏதும் எடுக்காமலும் கடைசி வரை களத்தில் நின்றனர்.
இரு அணியிலுமே தலா ஒரு பேட்ஸ்மேன் சதம் அடித்ததும், பிற பேட்ஸ்மேன்களில் ஒருவர் கூட அரைசதம் கடக்காததும் குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து தரப்பில் கிறிஸ் வோகேஸ் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜோர்டான், மொயின் அலி ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
குறைந்த பந்தில் பெற்ற இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா போனஸ் பாயிண்ட்டையும் பெற்றது. இன்னும் ஒரு பந்தை வீண் செய்திருந்தாலும் ஆஸி.க்கு போனஸ் பாயிண்ட் கிடைத்திருக்காது.
இந்த தொடரில், வரும் 18ம்தேதி மெல்போர்னில் நடைபெற உள்ள 2வது லீக் ஆட்டத்தில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் மோத உள்ளன. தொடரின் அனைத்து ஆட்டங்களுமே இந்திய நேரப்படி காலை 8.50 மணிக்கு தொடங்கும்.