அடிலைட்: 138 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக பகல்-இரவு போட்டி அடிலைட் நகரில் நடைபெற்றது. அடிலெய்டில் ஆஸ்திரேலியா-நியூசிலாந்து இடையே நடைபெற்ற ஆட்டத்தில் ஆஸ்திரேலியா சாதனை வெற்றி பெற்று டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரும் நியூசிலாந்து அணி, 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் கடைசி டெஸ்ட் போட்டியை கிரிக்கெட் ரசிகர்கள் பார்த்து ரசிப்பதற்கு வசதியாக பகல்-இரவு ஆட்டமாக நடத்துவதற்கு இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் தீர்மானித்தன.

இதையடுத்து 138 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக பகல்-இரவு போட்டி அடிலைட் நகரில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. வழக்கமான சிகப்பு நிற பந்துகளுக்குப் பதில் இளஞ்சிவப்பு (பிங்க்) நிற பந்துகள் பயன்படுத்தப்பட்டன.
டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது நியூஸிலாந்து. அந்த அணி 65.2 ஓவர்களில் 202 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலியா அணி 116 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்கள வீரர்களின் பேட்டிங் திறமையால் அந்த அணி 224 ரன்கள் குவித்தது.
பின்னர் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து, இரண்டாவது நாள் ஆட்டநேர இறுதியில் 5 விக்கெட் இழப்புக்கு 116 ரன்கள் எடுத்திருந்தது. இன்று தொடர்ந்து விளையாடிய நியூஸிலாந்து, மளமளவென்று விக்கெட்டுகளை இழந்து 208 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. ஆஸ்திரேலியா சார்பில் ஹஸல்வுட் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

187 ரன்கள் எடுத்தால் வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலியா 7 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் எடுத்து, மூன்றாவது நாளிலேயே வெற்றி பெற்றது. இதன் மூலம் முதல் பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று சாதனை படைத்தது ஆஸ்திரேலியா. அந்த அணியின் ஹஸல்வுட் ஆட்ட நாயனாக தேர்வு பெற்றார். இந்த வெற்றி மூலம் நியூசிலாந்து உடனான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றியது.
முன்னதாக வரலாற்றின் முதல் டெஸ்ட் 1877ம் ஆண்டு, மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் மோதியதுதான், வரலாற்றின் முதல் டெஸ்ட் போட்டியாகும். அதில் ஆஸி. அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.