102 ரன்களில் சுருண்ட நியூசிலாந்து.. தொடரை வென்ற ஆஸ்திரேலியா.. சிஎஸ்கே வீரர் சொதப்பல்
: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 102 ரன்களில் சுருண்டு படுதோல்வியை சந்தித்தது. மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணி ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
இந்த நிலையில் இரண்டாவது t20 ஆக்லாந்து நகரில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் டிராவிஸ் ஹெட் அதிரடியாக விளையாடி 5 சிக்சர்களை விளாசினார்.

இதன் மூலம் 22 பந்துகளில் அவர் 45 ரன்கள் எடுத்திருந்த நிலையில் போல்டாகி வெளியேறினார். தொடக்க வீரராக களம் இறங்கிய ஸ்மித் 11 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பெவிலியன் திரும்பினார். கடந்த போட்டியில் அதிரடி காட்டிய மிட்செல் மார்ஷ் இம்முறை இரண்டு சிக்ஸர்கள் அடித்து 26 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.
அதிரடி வீரர் மேக்ஸ்வெல் 6 ரன்களிலும் ஜோஸ் இங்கிலீஷ் ஐந்து ரன்களிலும் டிம் டேவிட் 17 ரன்களிலும், மேத்தீவ் வெட் 1 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, ஆஸ்திரேலிய அணி 138 ரன்களுக்கு ஏழு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனை அடுத்து களமிறங்கிய பாட் கம்மின்ஸ், அபாரமாக விளையாடி 5 பவுண்டரிகள் அடித்தார். இதன் மூலம் 22 பந்துகளில் 28 ரன்கள் சேர்க்க ஆஸ்திரேலிய அணி தட்டு தடுமாறி 19.5 ஓவர்களில் 174 ரன்கள் எடுத்தது.

நியூசிலாந்து தரப்பில் லோகி பெகுர்சன் நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றி வெறும் 12 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார். சிஎஸ்கே வீரர் மிட்செல் சாண்ட்னர் நான்கு ஓவருக்கு 35 ரன்கள் விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனை அடுத்து 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் பின் ஆலன் 6 ரன்னிலும், வில் யங் 5 ரன்களிலும், சிஎஸ்கே வீரர் மிச்செல் சாண்ட்னர் 7 ரன்களிலும் அடுத்தடுத்து வெளியேறினர்.
ஒரு கட்டத்தில் நியூசிலாந்து அணி 29 ரன்கள் சேர்ப்பதற்குள் நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனை அடுத்து கிளன் பிலிப்ஸ், பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 35 பந்துகளில் 42 ரன்கள் சேர்த்தார். ஆனால் அதன் பிறகு களம் இறங்கிய எந்த வீரர்களும் அவருக்கு துணை நிற்கவில்லை. இதன் காரணமாக நியூசிலாந்து அணி 17 ஓவர் முடிவில் 102 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் ஆஸ்திரேலியா தொடரை இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய வீரர் ஆடம் சாம்பா நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.


Click it and Unblock the Notifications