துபாய் : கடந்த 15 நாட்களுக்கு முன்பு தான் பாகிஸ்தான் அணி சர்வதேச ஒருநாள் போட்டிகள் தரவரிசையில் முதல் இடத்தை பிடித்து இருந்தது.
அதற்கு முன் ஆஸ்திரேலிய அணிதான் முதல் இடத்தில் இருந்தது. தற்போது பாகிஸ்தான் அணியை மீண்டும் முந்தி இருக்கும் ஆஸ்திரேலிய அணி முதல் இடத்தை பிடித்துள்ளது.

அதிரடி வெற்றி : தென் ஆபிரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் அதிரடியாக 123 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக மற்ற அணிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்திய நிலையில் ஆஸ்திரேலியா முதல் இடத்தையும் பிடித்துள்ளது.
எப்படி நடந்தது இந்த மாற்றம்? : முன்னதாக கடந்த ஆகஸ்ட் நான்காம் வாரத்தில் பாகிஸ்தான் அணி, ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று 3 - 0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. அதன் மூலம் ஆஸ்திரேலியாவை விட அதிக புள்ளிகள் பெற்று பாகிஸ்தான் அணி முதல் இடத்தை பிடித்து இருந்தது.
ஆஸ்திரேலியா அதிரடி : அடுத்ததாக பாகிஸ்தான் அணி ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரிலும், ஆஸ்திரேலியா, தென் ஆபிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் மோதின. இதில் இரண்டு அணிகளும் தொடர்ந்து வெற்றிகளை பெற்று வந்தன.
121 புள்ளிகள் : எனினும், தென் ஆபிரிக்கா அணி தரவரிசைப் பட்டியலில் ஐந்தாம் இடத்தில் இருப்பதால் அந்த அணியை முதல் இரண்டு போட்டிகளில் வீழ்த்திய ஆஸ்திரேலியா, இரண்டு புள்ளிகள் பெற்று 121 புள்ளிகளுடன் தரவரிசையில் முதல் இடத்தை பிடித்தது.
பாகிஸ்தான் நிலை : மறுபுறம், பாகிஸ்தான் அணி தரவரிசைப் பட்டியலில் பின்தங்கி இருக்கும் வங்கதேசம், இலங்கை, நேபாளம் ஆகிய அணிகளை மட்டுமே ஆசிய கோப்பை தொடரில் வீழ்த்தி இருக்கிறது. அதன் காரணமாக அந்த அணி அதிக புள்ளிகள் பெற முடியாமல் 120 புள்ளிகள் மட்டுமே பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது.
இந்தியாவுக்கு வாய்ப்பு? : இந்திய அணி 114 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. அடுத்து சில ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர், இந்தியா - ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டித் தொடர், உலகக்கோப்பை தொடர் என வரிசையாக போட்டிகள் இருப்பதால் முதல் மூன்று இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இந்தியா ஆகிய அணிகள் முதல் இடத்தை மாற்றி, மாற்றி பிடிக்கக்கூடும்.