மும்பை : உலகக்கோப்பை தொடர் கிரிக்கெட் போட்டி தொடங்க இன்னும் சில நாட்களில் உள்ள நிலையில் பலம் வாய்ந்த அணியாக கருதப்படும் ஆஸ்திரேலியா தற்போது மோசமான நிலையில் இருக்கிறது.உலகக்கோப்பை என்றாலே ஆஸ்திரேலியா அணி தனி பலத்துடன் களமிறங்கும்.இதுவரை ஐந்து உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை ஆஸ்திரேலிய அணி வென்றிருக்கிறது.
இந்த நிலையில் 2015 ஆம் ஆண்டு தங்களது சொந்த மண்ணில் விளையாடிய போது ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டத்தை கடைசியாக வென்றது. 2019 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணி தோல்வியை தழுவிய நிலையில் தற்போது மீண்டும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது. எனினும் உலகக்கோப்பை தொடர் முன் ஆஸ்திரேலியாவில் ஒருநாள் கிரிக்கெட்டில் தடுமாறி வருகிறது.

இன்னும் சொல்லப்போனால் கடைசியாக அவர்கள் விளையாடிய ஐந்து ஒருநாள் போட்டிகளிலும் ஆஸ்திரேலியா அணி தோல்வியை தழுவி இருக்கிறார்கள். இது அந்த அணிக்கு பெரும் நம்பிக்கை சீர்குலைவை ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சு எப்போதுமே கெத்தாக இருக்கும். ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சை கண்டாலே வீரர்கள் நடுங்குவார்கள்.
ஆனால் தற்போது உள்ள ஆஸ்திரேலிய அணி கடந்த 12 நாட்களில் மட்டும் நான்கு முறை எதிரணியை 300 ரன்கள் அடிக்க வைத்திருக்கிறது என்று சொன்னால் யாருமே நம்ப மாட்டார்கள். கடந்த பன்னிரண்டாம் தேதி தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் 338 ரன்கள் விட்டுக் கொடுத்தார்கள். இதேபோன்று நான்காவது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை 416 ரன்கள் அடிக்க வைத்தார்கள்.
ஆஸ்திரேலியா பந்துவீச்சாளர்கள் இதேபோன்று தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டியில் 315 ரன்களை ஆஸ்திரேலிய பவுலர்கள் விட்டுக் கொடுத்தார்கள். தற்போது இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 399 ரன்களை அடிக்க விட்டு இருக்கிறார்கள்.
இது எல்லாம் பார்க்கும்போது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வரலாற்றில் இடம் பெற்றிருக்கும் மோசமான பந்துவீச்சாளர்கள் இவர்களால் தான் இருப்பார்கள் என ரசிகர்கள் கருத்து கூறி வருகிறார்கள். இதனால் உலக கோப்பைக்கு முன் ஆஸ்திரேலியா அணி தங்களுடைய பழைய பார்மை மீட்பார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.