டர்பன் : தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி மூன்று டி20 மற்றும் 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் டி20 போட்டி டர்பன் நகரில் நேற்று தொடங்கியது.
இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக மிட்செல் மார்ஸ் களமிறங்கினார்.இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க கேப்டன் ஏய்டன் மார்க்ரம், பந்து வீசுவதாக அறிவித்தார்.

இதனை அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடியது. ஆட்டத்தில் இரண்டாவது பந்தில் டிராவிஸ் ஹெட், சிக்ஸர் அடித்து அடுத்த பந்தில் ஆட்டம் இழந்தார். எனினும் மற்றொரு தொடக்க வீரரான மேத்தீவ் ஷார்ட் 2 பவுண்டரி ஒரு சிக்சர் என 20 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.எனினும் கேப்டன் மிட்செல் மார்ஸ் அதிரடியாக விளையாடி தென்னாப்பிரிக்காவின் பந்துவீச்சை பதம் பார்த்தார்.
3.2 ஓவர்களில் எல்லாம் ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் 50 ரன்களை தாண்டியது. மேலும் ஜோஸ் இங்கிலீஷ் ஒரு ரன்னிலும் மார்க்கஸ் ஸ்டோனிஸ் 6 ரன்களிலும் ஆட்டம் இழக்க மிட்செல் மார்ஸ் உடன் டிம் டேவிட் ஜோடி சேர்ந்து பட்டையை கிளப்பினார். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் தென்னாப்பிரிக்கா வீரர்கள் தடுமாறினர். பவர் பிளேவில் எல்லாம் ஆஸ்திரேலிய அணி 70 ரன்களை தொட்டது.
மிட்செல் மார்ஸ் 22 பந்துகளை எதிர்கொண்டு அரை சதம் கடந்தார். மறுபுறம் டிம் டேவிட் 24 பந்துகளில் அரை சதம் கடக்க ஆஸ்திரேலிய அணி 17.5 ஓவர்கள் எல்லாம் 200 ரன்களை தாண்டியது. ஆஸ்திரேலியாவின் இலக்கு 250 ரன்களை தொடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் டிம் டேவிட் 28 பந்துகளில் 64 ரன்கள் எடுத்த நிலையில் பவுமாவின் அற்புதமான கேட்ச்சால் ஆட்டம் இழந்தார். அவருடைய இன்னிங்ஸில் ஏழு பவுண்டர்களும் நான்கு சிக்ஸர்களும் அடங்கும்.
கடைசிவரை ஆட்டமிழக்காமல் நின்ற கேப்டன் மார்ஸ் 49 பந்துகளில் 92 ரன்கள் எடுத்தார். இதில் இரண்டு சிக்ஸர்களும் ,11 பவுண்டரிகளும் அடங்கும். இதனால் ஆஸ்திரேலியா 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 226 ரன்கள் எடுத்தது. 227 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியில் தெம்பா பவுமா டக் அவுட் ஆகி வெளியேறினார். வெண்டர் டூஷன் அதிரடியாக விளையாடி இரண்டு சிக்ஸர்கள், இரண்டு பவுண்டரிகள் அடித்த நிலையில் 11 பந்துகளை எதிர்கொண்டு 21 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.
அதன் பிறகு தென்னாப்பிரிக்க அணிக்கு சரிவாகவே அமைந்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ஏய்டன் மார்க்ரம் ஏழு ரன்களிலும், மும்பை இந்தியன்ஸ் வீரர் டிவால்ட் பிரவீஸ் ஐந்து ரன்களிலும் , டிரிஸ்டியன் ஸ்டப்ஸ் டக் அவுட் ஆகியும் அடுத்தடுத்து வெளியேறினர். தொடக்க வீரர் ரிசா ஹென்றிக்ஸ் மட்டும் 43 பந்துகளில் 56 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்ததால் தென்னாப்பிரிக்க அணி 15.3 ஓவரில் 115 ரன்களில் சுருண்டது. இதனை அடுத்து 111 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று தொடரில் முன்னிலையில் உள்ளது.