ஐசிசி தரவரிசை - 39 ஆண்டுக்கு பிறகு ஆஸி படைத்த சாதனை..விளையாடாமல் நம்பர் 1 இடத்தில் இருக்கும் அஸ்வின்
துபாய் : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி இருக்கிறது. இதன் மூலம் ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் பல மாற்றங்கள் நடந்திருக்கிறது.
குறிப்பாக ஆஸ்திரேலிய அணி 39 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு சாதனையை படைத்திருக்கிறது. ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற ஸ்மித் மற்றும் ட்ராவிஸ் ஹெட் ஆகியோர் சதம் அடித்தார்கள்.

இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. டெஸ்ட் பேட்ஸ்மின்களுக்கான தரவரிசையில் முதல் மூன்று இடங்களை ஆஸ்திரேலிய வீரர்களே பிடித்திருக்கிறார்கள். மார்னஸ் லாபஸ்சேன் தொடர்ந்து முதலிடத்திலும் ஸ்மித் இரண்டாவது இடத்திலும் பைனலில் சதம் அடித்த டிராவிஸ் ஹெட் மூன்று இடங்கள் முன்னேறி மூன்றாவது இடத்திலும் இருக்கிறார்கள்.
இப்படி ஒரு சாதனையை 1984 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் அணியில் கார்டன் கிரீனிட்ஜ், கிளைவ் லியார்ட், லாரி கேம்ஸ் ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்திருந்தார்கள். அதன் பிறகு 39 ஆண்டுகள் கழித்து இப்போதுதான் இந்த சுவாரசிய சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. இதேபோன்று ஆஸ்திரேலிய அணியின் உஸ்மான் கவாஜா ஒன்பதாவது இடத்தில் இருக்கிறார்.
இதன் மூலம் ஆஸ்திரேலியாவின் நான்கு பேட்ஸ்மேன்கள் முதல் பத்து இடத்தில் இருக்கிறார்கள். பைனலில் 48 மற்றும் 66 ரன்கள் அடித்த அலெக்ஸ் கேரி 11 இடங்கள் முன்னேறி 36-வது இடத்தில் இருக்கிறார். இந்திய கேப்டன் ரோகித் சர்மா 729 புள்ளிகள் உடன் பன்னிரண்டாவது இடத்திலும் விராட் கோலி 700 புள்ளிகளுடன் 13 வது இடத்தில் நீடிக்கிறார்கள். இந்த நிலையில் பந்து வீச்சில் பைனலில் களமிறங்காத அஸ்வின் அதே முதல் இடத்தில் நீடிக்கிறார்.
இதன் மூலம் விளையாடாமலையே தனது முதல் இடத்தை அஸ்வின் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். ஆஸ்திரேலிய சுழற் பந்துவீச்சாளர் நாதன் லயான் இரண்டு இடங்கள் முன்னேறி தற்போது பந்துவீச்சாளருக்கான பட்டியலில் ஆறாவது இடத்தில் நீடிக்கிறார். இதேபோன்று ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு காரணமாக இருந்த ஸ்காட் போலாந்த் ஆறிடங்கள் முன்னேறி 36-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.இதேபோன்று ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசை பட்டியலில் பைனலில் அரை சதம் அடித்த சர்துல் தாக்கூர் மூன்று இடங்கள் முன்னேறி 31வது இடத்தில் இருக்கிறார்.


Click it and Unblock the Notifications