சக வீராங்கனையுடன் தகாத உறவு.. ஆஸ்திரேலிய துணை கேப்டன் ஆஷ்லே கார்ட்னர் மீது மனைவி பகிரங்க புகார்
சிட்னி: ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணியின் துணைக் கேப்டன் ஆஷ்லே கார்ட்னர், தனது சக வீராங்கனையுடன் தவறான தொடர்பு வைத்திருந்ததாக அவரது தன்பாலின மனைவி மோனிகா ரைட் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆஷ்லே கார்ட்னரும் அவரது நீண்ட கால தோழியான மோனிகா ரைட்டும் கடந்த 2024ஆம் ஆண்டு தங்களது காதலை வெளிப்படுத்திக் கொண்டனர். பின்னர் கடந்த 2025 ஏப்ரல் மாதம் இருவரும் முறைப்படி தன்பாலின திருமணம் செய்து கொண்டனர். ஆனால், திருமணம் நடந்த சில மாதங்களிலேயே இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்ததாகத் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், ஆஷ்லே கார்ட்னர் தன்னை ஏமாற்றிவிட்டு சக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனையான ஜார்ஜியா வோல் உடன் தொடர்பு வைத்திருந்ததாக மோனிகா ரைட் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜார்ஜியாவின் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள மோனிகா, "என் மனைவி என்னை ஏமாற்றிவிட்டு இவருடன் தான் தொடர்பு வைத்திருந்தார்" என்று பதிவிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 2025 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடரின் போதே இவர்களுக்குள் விரிசல் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. அதன் பின்னர் ஆஸ்திரேலியா திரும்பியவுடன் இருவரும் பிரிந்து வாழத் தொடங்கினர். அவர்கள் ஒரு குழந்தையைப் பெற்றுக்கொள்ள திட்டமிட்டு அதற்கான மருத்துவமனை முன்பதிவையும் செய்திருந்த நிலையில், இந்தத் திடீர் பிரிவால் அந்த முன்பதிவை மோனிகா ரத்து செய்துள்ளார்.
இதன் பின்னர் கார்ட்னர் தனது திருமண மோதிரங்களை மட்டும் வீட்டில் விட்டுவிட்டு மற்ற பொருட்களை எடுத்துக் கொண்டு சொல்லாமல் அங்கிருந்து வெளியேறியதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் தேர்வுக் குழுவிற்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னரே மகளிர் பிக் பாஷ் லீக் தொடரில் சிட்னி சிக்ஸர்ஸ் அணியின் கேப்டனாக கார்ட்னர் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விவகாரம் சமூக வலைதளங்களை தாண்டி ஆஸ்திரேலிய ஊடகங்களிலும் விவாதப் பொருளாக மாறி உள்ளது. இது குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் கருத்து கூற மறுத்துள்ளனர். ஆஸ்திரேலிய மகளிர் அணிக்குள் இது போன்ற தவறான உறவு இருப்பது அணியை பாதிக்காதா? என்பதே ரசிகர்களின் கேள்வியாக உள்ளது.


Click it and Unblock the Notifications
