யுவராஜ் சதம் வீண் - இந்தியா மீண்டும் தோல்வி
ஹைதராபாத்:
ஹைதராபாத்தில் நடந்த 3வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியிலும் இந்தியா தோல்வியைச் சந்தித்துள்ளது. யுவராஜ் சிங் சிறபபாக ஆடி அடித்த சதம், முன்னணி வீரர்கள் சரியாக விளையாடாததால், வெற்றிக்கு உதவாமல் வீணாகப் போனது.
பெங்களூரில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டி வருண பகவான் கருணையால் இந்தியாவின் தோல்வி காப்பாற்றப்பட்டது. கொச்சியில் நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டியில் இந்தியா 84 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்ததது.3வது போட்டி இன்று காலை ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் வழக்கம்போல் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார்.
முதலில் களமிறங்கிய கில்கிறிஸ்ட் மற்றும் ஹைடன் ஜோடியை முதல் 10 ஓவர்கள் வரை அசைக்க முடியவில்லை. இருவரும் அணல் பறக்க ஆடினர். குறிப்பாக ஹைடன் மிகச் சிறப்பாக ஆடினார்.
11 வது ஓவரில் இர்பான் பதானின் பந்து வீச்சில் கில்கிறிஸ்ட் போல்டாகி வெளியேறினார்.
முதல் 2 போட்டிகளில் காயம் காரணமாக விளையாடாமல் இருந்த ரிக்கிபாண்டிங் இந்த போட்டியில் பங்கேற்றார். அடுத்து களமிறங்கிய ரிக்கி பாண்டிங் 25 ரன்களுக்கு யுவராஜ் சிங்கின் பந்து வீச்சில் ஸ்ரீசாந்திடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
ஒவ்வொரு வீரரும் அணிக்குத் தேவையான அளவுக்கு நல்ல ரன்களை சேர்த்து விட்டுத்தான் வெளியேறினர். இதனால் ஆஸ்திரேலியா ரன் குவிப்பு சிறப்பாக தொடர்ந்தது.
நன்றாக விளையாடிக் கொண்டிருந்த ஹைடன் 60 ரன்கள் எடுத்து அவுட்டாகினார். அதன் பின்னர் கிளார்க், சைமண்ட்ஸ் ஜோடி இணைந்து இந்திய பந்து வீச்சாளர்களை அதிரடி ஆட்டம் ஆடி நையப் புடைத்தனர்.
இதில் சைமண்ட்ஸ் மிகச் சிறப்பாக ஆடினார். அசத்தலான ஐந்து சிக்சர்களையும் விளாசினார். 5 பவுண்டரிகளுடன், 89 ரன்களைக் குவித்தார்.
மறு முனையில் விளாசிக் கொண்டிருந்த மைக்கேல் கிளார்க் 59 ரன்கள் எடுத்தார். இறுதியில் ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 290 ரன்கள் குவித்தது.
ஸ்ரீசாந்த், ஜாகிர்கான், இர்பான்பதான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். யுவராஜ் சிங் 1 விக்கெட்டை வீழ்த்தினார்.
வெற்றிக்கு 291 ரன்கள் என்ற இலக்கோடு களமிறங்கியது. தசை பிடிப்பால் அவதியுற்ற கங்குலி இன்றைய போட்டியில் கலந்து கொள்வார் என்று அனைவரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் அவர் விளையாடவில்லை.
இந்தியாவின் சார்பில் காம்பிர் மற்றும் சச்சின் களமிறங்கினார்கள். கவுதம் காம்பிருக்கு 20-20 இறுதி ஆட்டத்தில் அவர் விளையாடிய களைப்பு இன்னும் போகவில்லை போலிருக்கிறது. அதனால் அவர் களமிறங்கியவுடன் 6 ரன்கள் மட்டும் எடுத்து ரெஸ்ட் எடுக்க போய்விட்டார்.
அதன் பின் களமிறங்கிய உத்தப்பா மற்றும் டிராவிட் ஆகியோர் அடுத்தடுத்து டக் அவுட்டாகி வெளியேறி விட்டனர். உத்தப்பா 20-20 உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடியதோடு சரி. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் சொதப்பலப்பாவாக இருக்கிறார். முன்னாள் கேப்டன் டிராவிட்டுக்கு ஓய்வு தேவை என்பதை டக் அவுட் மூலம் சொல்லிவிட்டார்.
அதன் பின்னர் களமிறங்கிய அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் சிங் நேற்று பேட்டி கொடுத்தது போலவே அதிரடியை காட்டி விட்டார். இதற்கிடையில் மறுமுனையில் ஆமை ஆட்டம் ஆடி, கஷ்டப்பட்டு ரன்களைச் சேர்த்துக் கொண்டிருந்த சச்சின் 43 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
அதற்கடுத்து களமிறங்கிய கேப்டன் தோனி, யுவராஜ் சிங்குடன் இணைந்து பொறுப்புடனும், அதேசமயம், அதிரடி ஆட்டமும் ஆடினர். இவர்களின் ஆட்டத்தால் இந்தியா வெற்றி பெற்று விடும் எனவே அனைவரும் நம்பினர்.
ஆனால் டோணி 33 ரன்களுக்கு ஆட்டமிழந்தபோது அந்த நம்பிக்கை மறைந்து போனது. பின்னர் களமிறங்கிய எவரும் நிலைத்து நின்று விளையாடவில்லை. யுவராஜ் சிங் மட்டும் மறுமுனையில் நின்று கொண்டிருக்க வந்தவர்கள் எல்லாம் வரிசையாக சென்றனர்.
ஆட்டம் கைவிட்டுப் போன நிலையிலும் கூட யுவராஜ் சிங் தொடர்ந்து அதிரடியாக ஆடிக் கொண்டிருந்தார். சிறப்பாக ஆடி சதம் போட்ட யுவராஜ், தொடர்ந்து சிறப்பாக ஆடி 121 ரன்களைச் சேர்த்தார்.
இறுதியில் 47.4 ஓவர்களில் இந்திய அணி 243 அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 243 ரன்கள் மட்டும் எடுத்தது. இதன் மூலம் 47 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியைச் சந்தித்தது.
பிரட்லீ, ஹாக் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், ஜான்சன் 2 விக்கெட்டுகளையும், கிளார்க் மற்றும் ஹோப்ஸ் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். சைமண்டஸ் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ரிக்கி பாண்டிங், எங்களை இந்தியா வெல்ல முடியாது என்று கூறியது கொஞ்சம் கொஞ்சமாக நிரூபணமாகி வருகிறது என்பதில் சந்தேகம் இல்லை.
அடுத்து வரும் 4 போட்டிகளிலும் வென்றால் தான் இந்தியாவின் மானம் காப்பாற்றப்படும். இதற்கு முதலில் டிராவிட், சச்சின், ஆகியோருக்கு ஓய்வு கொடுத்து இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்பதே அனைவரின் கருத்து. இதனை இந்திய கிரிக்கெட் வாரியம் அடுத்த போட்டியிலாவது செயல்படுத்துமா என்று பார்ப்போம்.
Story first published: Wednesday, December 7, 2011, 17:30 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications