டி20 உலககோப்பை - இந்தியா Vs பாகிஸ்தான் போட்டிக்கு பெரும் சிக்கல்.. கோடிக்கணக்கில் நஷ்டமாக வாய்ப்பு
மெல்போர்ன்: கிரிக்கெட் உலகமே எதிர்பார்க்கும் டி20 உலக கோப்பை போட்டி என்றால், அது இந்தியாவும், பாகிஸ்தானும் மோதும் ஆட்டம் தான்.
வரும் 23 ஆம் தேதி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இந்த ஆட்டம் நடைபெறுகிறது. இந்த போட்டியை காண சுமார் 90 அயிரம் டிக்கெட் விற்பனை ஆகி உள்ளது.
கடந்த முறை பாகிஸ்தானிடம் இந்தியா முதல் முறையாக டி20 உலககோப்பையில் தோல்வியை தழுவியது. இதனால் இம்முறை பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

வெள்ளம்
இந்த நிலையில், மெல்போர்ன் சுற்று வட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக குல்பாங் ஆற்றில் வெள்ளம் பெருக்கு எடுத்து ஓடுகிறது.இதனால் மெல்போர்ன் புறநகர் பகுதியில் உள்ள 12 இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதே போன்று மற்றொரு பிரதான மெரிபியாங்க் ஆற்றிலும் தண்ணீர் அபாய கட்டத்தை தாண்டி ஓடுகிறது.

42 இடங்களுக்கு எச்சரிக்கை
இதனால் 42 இடங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு, வெள்ளத் தடுப்பு பணியில் மும்முரமாக ஈடுபட அதிகாரிகளுக்கு விக்டோரியா மாகாண அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில், டி20 உலககோப்பை ஆஸ்திரேலியாவில் நடைபெறுவதால், கிரிக்கெட் போட்டிகளும் தடைப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

மழையால் ஆபத்து
இதனிடையே, அடுத்த வாரத்திற்கான வானிலை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதில், மெல்போர்னில் வரும் 23ஆம் தேதி இந்தியா, பாகிஸ்தான் மோதும் ஆட்டத்தின் போது மழை பெய்ய 60 சதவீதம் வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. இதனால் போட்டி மழையால் தடைப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

கைவிட வாய்ப்பு
இதனால் கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே 2013ஆம் ஆண்டு இந்தியா, பாகிஸ்தான் மோதிய சாம்பியன்ஸ் கோப்பை ஆட்டம், 2016ஆம் ஆண்டு டி20 உலககோப்பை ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டு, ஓவர்கள் குறைக்கப்பட்டது. இந்த நிலையில், இம்முறையும் மழையால் ஆட்டம் தடைப்படும் சூழல் உருவாகியுள்ளது.


Click it and Unblock the Notifications