மரண மாஸ் காட்டிய மேத்யூ வேட்.. பவுலிங்கில் அசத்திய அக்சர் படேல்.. இந்திய அணிக்கு 91 ரன்கள் இலக்கு!
நாக்பூர்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றிபெற 91 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி இன்று நாக்பூரில் நடைபெற்று வருகிறது. இந்த மைதானத்தில் ஈரப்பதம் அதிகம் இருந்ததால், டாஸ் போடுவதில் 2 மணி நேரத்திற்கும் மேலாக தாமதம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து 8.45 மணிக்கு நடுவர்கள் மேற்கொண்ட ஆய்வில், ஈரப்பதம் குறைந்தது.
இதன்பின்னர் ஆட்டம் 8 ஓவர்களாக குறைக்கப்பட்டுள்ளதாகவும், இரு அணிகளுக்கும் 2 ஓவர்கள் பவர் ப்ளே என்று அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து இந்திய அணி அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் உமேஷ் யாதவ், புவனேஷ்வர் குமார் ஆகியோர் நீக்கப்பட்டு, பும்ரா, ரிஷப் பண்ட் சேர்க்கப்பட்டனர்.

முதல் ஓவரை வீசிய ஹர்திக்
தொடர்ந்து ஆஸ்திரேலிய அணிக்காக கேப்டன் ஃபின்ச் - கேமரூன் க்ரீன் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இந்திய அணி பும்ரா முதல் ஓவரை வீசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஹர்திக் பாண்டியா பந்துவீசி ஆச்சரியம் கொடுத்தார். முதல் ஓவரில் 2 பவுண்டரிகள் அடிக்கப்பட்ட நிலையில், உடனடியாக ஸ்பின்னரை கொண்டு வந்தார் ரோஹித் ஷர்மா.

சிறப்பான தொடக்கம்
அக்சர் படேல் வீசிய 2வது ஓவரில் கேமரூன் க்ரீன் கொடுத்த கேட்ச் வாய்ப்பை விராட் கோலி தவறவிட்டார். ஆனால் அடுத்த 2வது பந்தில் விராட் கோலி கையால் ரன் அவுட் செய்யப்பட்டு 5 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த மேக்ஸ்வெல்லும், அதே ஓவரில் டக் அவுட்டாக, இந்திய ரசிகர்களின் ஆர்ப்பரிப்பு விண்ணை முட்டியது.

ஆஸி. தடுமாற்றம்
தொடர்ந்து 4வது ஓவரில் அதிரடி வீரர் டிம் டேவிட்டும் 2 ரன்களில் ஆட்டமிழக்க, ஆஸ்திரேலிய அணி பரிதாபமான நிலைக்கு சென்றது. தொடர்ந்து நீண்ட நாட்களுக்கு பின் இந்திய அணிக்கு திரும்பிய பும்ராவின் யார்க்கர் பந்தில் ஆஸி. கேப்டன் ஆரோன் ஃபின்ச்சும் 31 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதனால் 5 ஓவர்கள் முடிவில் ஆஸி. அணி 46 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

மாஸ் காட்டிய மேத்யூ வேட்
இதன்பின்னர் கடந்த போட்டியில் சிறப்பாக ஆடிய வேட் - ஸ்டீவ் ஸ்மித் ஜோடி, ஓவருக்கு இரு பவுண்டரிகள் விளாசி ஸ்கோரை உயர்த்தியது. இதன் மூலம் 7 ஓவர்களில் 71 ரன்கள் சேர்க்கப்பட, கடைசி ஓவரை வீச ஹர்சல் படேல் அழைக்கப்பட்டார். அந்த ஓவரில் ஆஸி. அணி மேத்யூ வேட் 3 சிக்சர்களை விளாச மொத்தமாக 19 ரன்கள் சேர்க்கப்பட்டது. இதனால் ஆஸி. அணி நிர்ணயிக்கப்பட்ட 8 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 90 ரன்கள் சேர்த்தது. சிறப்பாக ஆடிய வேட் 43 ரன்கள் சேர்த்தார். இந்திய அணி தரப்பில் அக்சர் படேல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.


Click it and Unblock the Notifications