மும்பை : இந்திய அணிக்கு உலக கோப்பையை வென்று தரப்போவது சூரியகுமார் யாதவ் தான் என்று முன்னாள் ஆஸ்திரேலிய அணி கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். சூரியகுமார் யாதவ் கடந்த ஆண்டு டி20 கிரிக்கெட்டில் ஆயிரம் ரன்களுக்கு மேல் அடித்து சாதனை படைத்தார்.
இதனால் சூரியகுமார் யாதவுக்கு டெஸ்ட் மற்றும் ஒரு நாள் அணியிலும் இடம் தரப்பட்டது.
ஆனால் நடப்பாண்டில் ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் சரியாக விளையாடவில்லை. தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மூன்று முறை கோல்டன் டக் ஆகி ரசிகர்களை வெறுப்பேற்றினார். ஐபிஎல் போட்டியின் முதல் ஆட்டத்திலும் சூரியகுமார் யாதவ் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

இந்த நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக உலகக் கோப்பை தொடரில் பங்கேற்க மாட்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதனால் சூரியகுமார் யாதவுக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்க வேண்டும் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், சூரியகுமார் யாதவ் வெள்ளை நிற கிரிக்கெட்டில் எப்படி விளையாடுவார் என்று கிரிக்கெட் உலகில் உள்ள அனைவருக்குமே தெரியும்.
அதனால் இந்திய அணி தொடர்ந்து அவருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். இப்படிப்பட்ட வீரர்தான் உங்களுக்கு உலக கோப்பையை வென்று தருவார். சூர்ய குமார் யாதவ் தொடர்ந்து ரன் அடிக்காமல் போகலாம். ஆனால் முக்கிய கட்டத்தில் பெரிய ரன்களை அடிக்கக்கூடிய திறமை அவருக்கு இருக்கிறது. ஆஸ்திரேலியாவுக்கு சைமண்ட்ஸ் எப்படி இருந்தாரோ, சூரியகுமார் அது போல் இந்தியாவுக்கு இருப்பார்.
இது போன்ற வீரர்களுக்கு நீங்கள் அதிக வாய்ப்பு கொடுக்க வேண்டும். அவரிடம் இருந்து நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்பது குறித்து சொல்லி விட வேண்டும். சூரியகுமார் யாதவுக்கு அதிக திறமை இருக்கிறது.தனி ஆளாக நின்று அவர் போட்டியை வென்று கொடுப்பார். சூரியகுமார் யாதவ் ஒரு மேட்ச் வின்னர்.
அதனால் பிளேயிங் லெவனில் அவருக்கு கண்டிப்பாக இடம் கொடுங்கள். என்னை கேட்டால் பேட்டிங் வரிசையில் சூரிய குமார் யாதவ் ஐந்தாவதாக களம் இறக்குங்கள். அதற்கு கீழ் களம் இறக்க கூடாது. ஏனென்றால் ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, அக்சர் பட்டேல் ஆகியோர் அணியில் இருக்கிறார்கள். உங்களுடைய சிறந்த பேட்ஸ்மேனுக்கு நீங்கள் களத்தில் அதிக நேரம் விளையாட வாய்ப்பு கொடுக்க வேண்டும்.
ஏனென்றால் இது போன்ற திறமையான வீரர்களை நீங்கள் கீழ் வரிசையில் இறக்கினீர்கள் என்றால் அவர்களுடைய முழு திறமையும் வெளிப்படாமல் போய்விடும். எனவே நம்பர் ஐந்தாவது பேட்ஸ்மேன் ஆக களம் இறக்குவதே சூர்யகுமாருக்கு தகுந்த இடம். அந்த ரோலில் அவர் வளர நீங்கள் கொஞ்சம் அவகாசம் கொடுங்கள் என ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார்.