இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் படையை அறிவித்தது ஆஸ்திரேலியா.. வாட்சன் இல்லை!
மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவுக்கு வரும் இந்திய அணியுடன் மோதும் 13 பேர் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் அணியை ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. இந்த அணிக்கு கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் இருப்பார். முக்கிய வீரரான ஷான் வாட்சன் அணியில் இடம் பெறவில்லை.
ஜனவரி 12ம் தேதி இந்த ஒரு நாள் போட்டித் தொடர் பெர்த் நகரில் தொடங்குகிறது. மொத்தம் 5 போட்டிகளில் இரு அணிகளும் மோதவுள்ளன. இதில் முதல் 3 போட்டிகளுக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் புதுமுகங்களாக ஜோயல் பாரிஸ், ஸ்காட் போலன்ட் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆல் ரவுண்டர் ஷான் வாட்சன் நீக்கப்பட்டுள்ளார். மிட்சல் ஸ்டார்க் காயம் காரணமாக இடம் பெறவில்லை.

அசத்திய போலன்ட்
தேர்வு குறித்து தேசிய தேர்வாளர் ராட் மார்ஷ் கூறுகையில், ஸ்காட் போலன்ட் தொடர்ந்து அருமையாக பந்து வீசி வருகிறார். விக்டோரியா அணிக்காக சிறப்பாக பந்து வீசியுள்ளார். அவரது தேர்வு சரியானது.

ஜோயல் பாரிஸ்
ஜோயல் பாரிஸ் ஒரு அபாரமான வளரும் வீரர். பந்தை சிறப்பாக கையாளக் கூடிய நல்ல பவுலர். பிக் பாஷ் போட்டியில் அருமையாக ஆடியிருந்தார். அவருக்கு நல்ல எதிர்காலம் உள்ளது என்றார் மார்ஷ்.

என்னென்ன போட்டி?
இரு அணிகளும் 5 ஒரு நாள் போட்டிகள் தவிர 3 டுவென்டி 20 போட்டிகளிலும் ஆடவுள்ளன. இதே ஆஸ்திரேலியாவில் நடந்த உலகக் கோப்பை அரை இறுதிப் போட்டியில் இரு அணிகளும் மோதின. அதுவரை அபாரமாக வென்று வந்த இந்தியா, ஆஸ்திரேலியாவிடம் பரிதாபமாகத் தோற்றது நினைவிருக்கலாம்.

முதல் முறையாக
அரை இறுதித் தோல்விக்குப் பின்னர் இரு அணிகளும் தற்போது முதல் முறையாக சந்திக்கவுள்ளன. இந்த முறை ஆஸ்திரேலியாவுக்கு இந்தியா பதிலடி தருமா, பழி தீர்க்குமா என்ற நப்பாசையில் இந்திய ரசிகர்கள் உள்ளனர்.

ஆஸ்திரேலிய அணி (முதல் 3 போட்டிகளுக்கு)
ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர், ஜார்ஜ் பெய்லி, ஸ்காட் போலன்ட், ஜோஸ் ஹேஸல்வுட், ஜேம்ஸ் பால்க்னர், ஆரோன் பின்ச், மிட்சல் மார்ஷ், ஷான் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், கனே ரிச்சர்ட்சன், ஜோயல் பாரிஸ், மாத்யூ வாட்.


Click it and Unblock the Notifications