லண்டன் : இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது ஆஷஸ் டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் ஆஸி. அணி ஆதிக்கம் செலுத்தியுள்ளது. அந்த அணியினர் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 339 ரன்களை குவித்துள்ளனர்.
ஆஷஸ் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. கிரிக்கெட் உலகின் மெக்கா என்று அழைக்கப்படும் லார்ட்ஸ் மைதானத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்பின் களமிறங்கிய ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் அபாரமாக விளையாடி 66 ரன்கள் சேர்த்தார். இதில் எட்டு பவுண்டரிகளும் ஒரு சிக்ஸரும் அடங்கும். முதல் டெஸ்டில் சதம் அடித்த உஸ்மான் கவாஜா வெறும் 17 ரன்கள் மட்டுமே சேர்த்தார்.

அதேபோல் உலகின் முதல் நிலை வீரரான மார்னஸ் லாபுஷேன் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஜோடி இணைந்து ஆஸ்திரேலிய அணியின் ரன்களை வேகமாக உயர்த்தினர். இதில் லபுஷேன் 93 பந்துகளை எதிர் கொண்டு 47 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதையடுத்து ஸ்மித் - டிராவிஸ் ஹெட் ஜோடி இணைந்து இங்கிலாந்தின் பந்துவீச்சுக்கு கடும் நெருக்கடி கொடுத்தது.
ஒருபக்கம் டிராவிஸ் ஹெட் அதிரடியாக விளையாடி ஆஸ்திரேலியாவின் ரன்களை அதிவேகத்தில் உயர்த்தினார். சரியாக சொல்ல வேண்டுமென்றால் இங்கிலாந்து அணி பேட்டிங்கில் எப்படி செயல்படுவார்களோ, அதேபோல் அதிரடியாக விளையாடினார். இன்னொரு பக்கம் வழக்கம் போல் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்மித் 102 பந்துகளை எதிர்கொண்டு அரை சதம் கடந்தார். இதனால் இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் என்ன செய்வதென தெரியாமல் குழம்பினர்.
சிறப்பாக ஆடிய டிராவிஸ் ஹெட் 48 பந்துகளில் அரைசதம் கடக்க, ஆஸி. அணியும் 300 ரன்களை கடந்தது. பின்னர் வேறு வழியில்லாமல் பென் ஸ்டோக்ஸ் ஜோ ரூட் பக்கம் திரும்பினார். அவரை அட்டாக் செய்ய நினைத்த டிராவிஸ் ஹெட் 77 ரன்களில் ஸ்டம்பிங் முறையில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த கேமரூன் க்ரீனும் டக் அவுட்டாக, ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 316 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை ஆஸி. இழந்த நிலையில், ஸ்டீவ் ஸ்மித் - அலெக்ஸ் கேரி கூட்டணி முதல் நாளில் வேறு விக்கெட்டுகள் கொடுக்காமல் விளையாடியது.
இதன் மூலம் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 339 ரன்களை சேர்த்துள்ளது. நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் 85 ரன்களுடனும், அலெக்ஸ் கேரி 11 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். முதல் நாளின் கடைசி சில நிமிடங்களில் இங்கிலாந்து அணி புதிய பந்தை பெற்றுள்ளதால், இரண்டாம் நாளின் முதல் செஷன் ஆட்டம் ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.