ராஜ்காட் : இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணி 353 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
இந்த நிலையில் ஒயிட் வாஷ் தவிர்ப்பதற்காக ஆஸ்திரேலிய அணி இன்று வெற்றி பெற வேண்டும் என்ற வெறியில் விளையாடி வருகிறது. ரன் குவிப்புக்கு சாதகமான ராஜ்காட் மைதானத்தில் ஆஸ்திரேலிய அணி அதிரடியாக விளையாடி வருகிறது.

இந்த மைதானத்தில் நடைபெற்ற மூன்று ஒரு நாள் போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணியே வெற்றி பெற்றிருக்கிறது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணியில் டேவிட் வார்னர்,மிட்செல் மார்ஷ் விளையாடி ரன்களை விளாசினர். ஆஸ்திரேலியா 6.1 ஓவரில் எல்லாம் 50 ரன்கள் கடந்தது. 11.4 ஓவரில் 100 ரன்களை கடந்தும் விளையாடியது. அதிரடியாக விளையாடிய டேவிட் வார்னர் 34 பந்துகளில் 56 ரன்களில் வெளியேற மார்ஷ் மற்றும் ஸ்மித் ஜோடி நிதானமாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மிச்செல் மார்ஸ் 96 ரன்களில் குல்தீப் பந்துவீச்சில் பெவிலியன் திரும்பினார். இதேபோன்று ஸ்மித் 74 ரன்களில் சிராஜ் பந்துவீச்சில் வெளியேறினார். ஆஸ்திரேலிய அணி ஒரு கட்டத்தில் 400 ரன்கள் அடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 215 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்து வலுவான நிலையில் இருந்தது. எனினும் இந்தியாவின் அபார பந்துவீச்சால் 299 ரன்களுக்கு ஆறு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அந்த அணியின் அலெக்ஸ் கெரி, மேக்ஸ்வெல், கேமரான் கிரீன் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். எனினும் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் மார்னஸ் லாபஸ்சென் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 58 பந்துகளில் 72 ரன்கள் சேர்த்தார். இதனால் 50 ஓவர் முடிவில் ஆஸ்திரேலிய அணி ஏழு விக்கெட் இழப்பிற்கு 352 ரன்கள் எடுத்தது இந்திய அணி பந்து வச்சு தரப்பில் பும்ரா 10 ஓவர் வீசி 81 ரன்களை விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்.