AUS vs PAK : பாகிஸ்தான் அணியுடன் சேர்ந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் மகன்.. வியப்பில் கிரிக்கெட் ரசிகர்கள்
சிட்னி : முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் மகன் வில் சைமண்ட்ஸ் பாகிஸ்தான் அணியினருடன் சேர்ந்து பயிற்சியில் ஈடுபட்டார்.
பாகிஸ்தான் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. கடைசி டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக பாகிஸ்தான் அணி பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது அவர்களுடன் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் மகன் வில்-உம் உடன் இருந்தார்.

ஆஸ்திரேலிய அணியின் திறமையான ஆல் - ரவுண்டராக இருந்தவர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ். அந்த அணியின் பல உலகக்கோப்பை வெற்றிகள், ஆஷஸ் கோப்பை வெற்றிகளில் முக்கிய பங்கு வகித்தவர். இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஹர்பஜன் சிங் உடனான சர்ச்சையால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மறக்க முடியாத நபராக மாறினார். கடந்த ஆண்டு ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் தன் 46வது வயதில் மறைந்தார்.
இந்த நிலையில் அவரது சிறு வயது மகன் வில் சைமண்ட்ஸ் தந்தை வழியில் கிரிக்கெட் வீரராக வர இப்போதே பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், சிட்னியில் பாகிஸ்தான் வீரர்கள் பயிற்சி செய்த போது வில் சைமண்ட்ஸ் அங்கு இருந்ததை கண்ட பாகிஸ்தான் வீரர்கள் அவருடன் பேசி அவரையும் தங்களுடன் பயிற்சி மேற்கொள்ள வருமாறு அழைத்தனர்.
பின்னர் பாகிஸ்தான் அணி பயிற்சியாளர்கள் அவருடன் பேசி அவர் என்ன செய்து வருகிறார், கிரிக்கெட்டில் என்னவாக விரும்புகிறார் என கேட்டறிந்தனர். இது குறித்த வீடியோவை பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளது. பலரும் பாகிஸ்தான் அணியின் செயலை பாராட்டி வருகின்றனர்.
பாகிஸ்தான் அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 0 - 2 என இழந்துள்ளது.மூன்றாவது டெஸ்ட்டில் வென்று ஆறுதல் வெற்றியை பெற அந்த அணி முயலும் என எதிர்பார்க்கப்படுகிறது. மறுபுறம், ஆஸ்திரேலிய அணியின் மூத்த வீரர் டேவிட் வார்னர் இந்தப் போட்டியுடன் ஓய்வு பெற இருக்கிறார். எனவே, அவருக்காக அவரது கடைசி போட்டியை வென்று கொடுக்க ஆஸ்திரேலிய அணியும் போராடும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications