லக்னோ : 2023 உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணியின் ஆட்டம் படு மோசமாக உள்ளது.
இந்திய அணியிடம் பெரிய முன்னிலையில் இருந்தும், வெற்றி பெற வேண்டிய போட்டியில் தோல்வி அடைந்தது ஆஸ்திரேலியா. அடுத்து தென்னாப்பிரிக்க அணியிடம் 134 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்து இருக்கிறது ஆஸ்திரேலியா.

ஆஸ்திரேலியா என்றாலே ஐந்து முறை உலகக்கோப்பை வென்றதும், ஸ்டீவ் வாஹ், ரிக்கி பாண்டிங் போன்ற கேப்டன்களின் தலைமையில் தொடர்ந்து உலகக்கோப்பை வென்றதும் தான் பலருக்கும் நினைவுக்கு வரும்.
ஆனால், தற்போதைய ஆஸ்திரேலிய அணி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இருந்ததை விட படுமோசமான நிலைக்கு சென்றுள்ளது. லக்னோவில் நடைபெற்ற தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா அணி டாஸ் வென்றும் பந்துவீச்சை தேர்வு செய்தது.
பேட்டிங் செய்ய கடினமான ஆடுகளத்தில் முதலில் பேட்டிங் செய்வதே சரியான விஷயம். ஆனால், ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அங்கேயே சொதப்பல் ஆரம்பித்தது.
அடுத்து பந்துவீச்சில் ஆஸ்திரேலிய அணியால் கடைசி ஒரு ஓவரில் மட்டுமே தென்னாப்பிரிக்காவை கட்டுப்படுத்த முடிந்தது. மிட்செல் ஸ்டார்க் வீசிய 50வது ஓவரில் தென்னாப்பிரிக்கா 1 ரன் எடுத்தது. முதல் 49 ஓவர்களில் 310 ரன்களை குவித்தது தென்னாப்பிரிக்கா.
ஆஸ்திரேலியாவுக்கு 312 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்தது தென்னாப்பிரிக்கா. இதில் ஆஸ்திரேலியா செய்த பீல்டிங் சொதப்பல்களை மறந்து விட முடியாது. 49வது ஓவரில் மட்டுமே இரண்டு கேட்ச், இரண்டு பீல்டிங் தவறுகளை செய்தது ஆஸ்திரேலிய அணி. மற்ற ஓவர்களில் நடந்தது தனி.
அடுத்து பேட்டிங்கில் ஆஸ்திரேலியா அணியால் 40.5 ஓவரில் 177 ரன்களே எடுக்க முடிந்தது. அந்த அணிக்கு எதிராக இரண்டு தவறான அவுட் கொடுக்கப்பட்டது. ஆனால், அது சரியாக இருந்திருந்தால் கூட அந்த அணியால் இந்தப் போட்டியில் வென்று இருக்க முடியாது என்பதே நிதர்சனம்.
2023 உலகக்கோப்பை தொடருக்கான அணித் தேர்விலேயே ஆஸ்திரேலியா கோட்டை விட்டு விட்டது. நன்றாக ஆடும் இளம் வீரர்களை எல்லாம் ஊரில் விட்டு விட்டு, காயத்தில் இருந்து மீண்ட வீரர்கள், தேவையா இல்லையா என்றே புரியாமல் சில ஆல்-ரவுண்டர்கள். சரியாக ஐந்து பந்துவீச்சாளர்கள் என குழப்பமான அணித் தேர்வை செய்ததே இந்த நிலைக்கு காரணம்.
ரிக்கி பாண்டிங், ஷேன் வார்னே, கிளென் மெக்கிராத், ஹெய்டன், கில்கிறிஸ்ட் போன்ற வீரர்களின் ஆட்டத்தால் ஆஸ்திரேலிய அணியின் மஞ்சள் நிற உடையை எந்த வீரர் அணிந்து வந்தாலும் மற்ற அணிகளுக்கு பய உணர்வு வரும். ஆனால், தற்போதைய அணி மோசமாக அடி வரும் நிலையில், இனி ஆஸ்திரேலியா அந்த மஞ்சள் நிற உடையை மாற்றி விடலாம். ஏனெனில், இனி மஞ்சள் உடையை அணிந்த ஆஸ்திரேலிய அணியை கண்டு யாரும் பயப்படப் போவதில்லை என ஆஸ்திரேலிய அணியின் நீண்ட நாள் ரசிகர்கள் விரக்தி அடைந்துள்ளனர்.