புனே: வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.
உலகக்கோப்பை தொடரின் 43வது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா அணியை எதிர்த்து வங்கதேச அணி விளையாடியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். வங்கதேச அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் காயம் காரணமாக விலகியுள்ளதால், ஷாண்டோ கேப்டனாக செயல்பட்டார். இதையடுத்து முதல் பேட்டிங் ஆடிய வங்கதேச அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 306 ரன்கள் சேர்த்தது.

அதிகபட்சமாக ஹிருதாய் 74 ரன்களும், கேப்டன் ஷாண்டோ 45 ரன்களும் சேர்த்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் அப்பாட் மற்றும் ஜாம்பா இருவரும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதையடுத்து ஆஸ்திரேலியா அணியின் டிராவிஸ் ஹெட் - டேவிட் வார்னர் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. 3வது ஓவரிலேயே டிராவிஸ் ஹெட் 10 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறிய நிலையில், வார்னர் - மிட்செல் மார்ஷ் கூட்டணி இணைந்தது. இவர்கள் இருவரும் அதிரடியாக ரன்கள் சேர்த்தனர்.
சிறப்பாக ஆடிய டேவிட் வார்னர் அரைசதம் அடித்த நிலையில், இரண்டாவது விக்கெட்டுக்கு 120 ரன்கள் சேர்க்கப்பட்டது. பின்னர் 61 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து வார்னர் ஆட்டமிழந்த நிலையில், மிட்செல் மார்ஷ் - ஸ்டீவ் ஸ்மித் இருவரும் இணைந்தனர். இவர்கள் இருவரும் அதிரடியாக ரன்கள் சேர்க்க தொடங்கினார். இதனால் ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோர் உச்சத்திற்கு சென்றது. அதிரடியாக ஆடிய மிட்செல் மார்ஷ் 87 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார்.
இதனைத் தொடர்ந்து அவரின் அதிரடி தீவிரமாகிய நிலையில், மறுமுனையில் நின்றிருந்த ஸ்டீவ் ஸ்மித் அரைசதம் விளாசி அசத்தினார். தொடர்ந்து 117 பந்துகளில் மிட்செல் மார்ஷ் 150 ரன்களை கடக்க, இறுதியாக 44.4 ஓவர்களில் இலக்கை எட்டி ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. சிறப்பாக ஆடிய மிட்செல் மார்ஷ் 132 பந்துகளில் 177 ரன்களும், ஸ்டீவ் ஸ்மித் 64 பந்துகளில் 63 ரன்களும் எடுத்தனர். ஆஸ்திரேலிய அணிக்கு இது 7வது தொடர் வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.