இதுதான்யா மாஸ் கம்பேக்.. 2019 ஆஷஸ் தொடரில் நீக்கம்.. 2023ல் மீண்டு வந்த சதம் விளாசி கவாஜா மிரட்டல்!
பர்மிங்ஹாம்: இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஸ் தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா சதம் விளாசி அசத்தியுள்ளார்.
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் கிரிக்கெட் தொடர் பரபரப்பாக நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 393 ரன்கள் டிக்ளேர் செய்தது. இதையடுத்து இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. இதில் ஆஸ்திரேலிய அணியின் வார்னர், லபுஷேன் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

இந்த நிலையில் கவாஜா - டிராவிஸ் ஹெட் கூட்டணி இணைந்து அதிரடியாக ஸ்கோரை உயர்த்தியது. ஒருபக்கம் கவாஜா நிதானமாக அரைசதம் கடக்க, இன்னொரு பக்கம் டிராவிஸ் ஹெட் பவுண்டரிகளை விளாசி தள்ளினார். இதனால் 60 பந்துகளில் டிராவிஸ் ஹெட் அரைசதம் அடித்த நிலையில், மொயின் அலி மூலம் பென் ஸ்டோக்ஸ் அவரை வீழ்த்தி அசத்தினார். இதனால் ஆஸ்திரேலிய அணி 148 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதன்பின்னர் ஒட்டுமொத்த கட்டுப்பாட்டையும் உஸ்மான் கவாஜா எடுத்துக்கொண்டார். குறிப்பாக மொயின் அலியை அட்டாக் மேல் அட்டாக் செய்தார். லாங் ஆன் மற்றும் லாங் ஆஃப் திசையில் சிக்சர்களாக பறக்கவிட, இன்னொரு பக்கம் கேமரூன் க்ரீன் பவுண்டரிகளை விளாசினார். சிறப்பாக ஆடிய கவாஜா 199 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். இதன் மூலம் நடப்பு ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலிய அணிக்காக சதம் விளாசிய முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
2019ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற ஆஷஸ் தொடரின் போது 3வது போட்டியோடு உஸ்மான் கவாஜா ஆஸ்திரேலிய அணியில் இருந்து நீக்கப்பட்டார். தற்போது அதே ஆஸ்திரேலிய அணிக்காக அதே இங்கிலாந்து நாட்டில் வைத்து சதம் விளாசி தவித்துக் கொண்டிருந்த ஆஸ்திரேலிய அணியை மீண்டும் ஆட்டத்திற்குள் கொண்டு வந்துள்ளார். அதேபோல் 2022ஆம் ஆண்டு முதல் அதிக சதம் விளாசிய வீரர்கள் பட்டியலில், 7 சதம் விளாசி கவாஜா முதலிடத்தில் உள்ளார்.


Click it and Unblock the Notifications