கோமாவில் இருந்த ஆஸ்திரேலிய ஜாம்பவான் டேமியன் மார்ட்டின் வீடு திரும்பினார்.. கில்கிறிஸ்ட் தகவல்
சிட்னி: உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, கோமா சிகிச்சையில் இருந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் டேமியன் மார்ட்டின் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். இந்தச் செய்தியை அவருடைய நீண்ட கால நண்பரும், சக வீரருமான ஆடம் கில்கிறிஸ்ட் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
54 வயதான டேமியன் மார்ட்டின், கடந்த மாதம் திடீரென கடுமையான உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். கோல்ட் கோஸ்ட் பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, 'மெனின்ஜைடிஸ்' (Meningitis) எனப்படும் மூளை உறை அழற்சி நோய் தாக்கியிருப்பது கண்டறியப்பட்டது.

நோயின் தாக்கம் அதிகமாக இருந்ததால், மருத்துவர்கள் அவரைச் செயற்கையாக 'கோமா' (Induced coma) நிலையில் வைத்துத் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். உயிருக்குப் போராடிய நிலையில், அதிர்ஷ்டவசமாகச் சிகிச்சைக்குப் பலன் கிடைத்துச் சில நாட்களுக்கு முன்பு அவர் கண்விழித்தார்.
இந்நிலையில், ஆஷஸ் டெஸ்ட் போட்டியின் வர்ணனையின் போது பேசிய முன்னாள் விக்கெட் கீப்பர் ஆடம் கில்கிறிஸ்ட், "மார்ட்டின் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பிவிட்டார். அவர் முழு உடல் தகுதியை எட்ட இன்னும் சில காலம் ஆகும். ஆனாலும், அவர் ஆபத்தான கட்டத்தைத் தாண்டிவிட்டார் என்பது மகிழ்ச்சியளிக்கிறது" என்று கூறினார்.
மற்றொரு முன்னாள் வீரரான மார்க் வாக் கூறுகையில், "அவர் ஐசியூவில் இருந்த நிலையைப் பார்த்தபோது மிகவும் மோசமாக இருந்தது. உண்மையைச் சொல்லப்போனால் அவர் மீண்டு வந்திருப்பது ஒரு அதிசயம்." என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சரியான நேரத்தில் செயல்பட்டதே மார்ட்டினின் உயிரைக் காப்பாற்றியதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் பூரண குணமடைந்து வீடு திரும்பிய செய்தி உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
1992 முதல் 2006 வரை ஆஸ்திரேலிய அணிக்காக 67 டெஸ்ட் மற்றும் 208 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள மார்ட்டின், அந்த அணியின் மிகச் சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆவார். 2003 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணிக்கு எதிராக 84 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 88 ரன்கள் குவித்து இந்தியாவின் கோப்பைக் கனவைத் தகர்த்தவர் இவரே. 2004-ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் டெஸ்ட் தொடரை வென்றபோது, 'தொடர் நாயகன்' விருது வென்றதும் டேமியன் மார்ட்டின்தான்.


Click it and Unblock the Notifications