Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோமாவில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் டேமியன் மார்ட்டின்.. கலங்கிப் போன கில்கிறிஸ்ட், லீமன்

சிட்னி: 2000-களின் தொடக்கத்தில் கிரிக்கெட் உலகையே மிரள வைத்து வந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியை சேர்ந்த முன்னாள் வீரர் டேமியன் மார்ட்டின், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் 'செயற்கை கோமா' நிலையில் வைக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார் என்ற தகவல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

54 வயதாகும் டேமியன் மார்ட்டின், கடந்த வாரம் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் மோதிய பாக்ஸிங் டே டெஸ்ட் நடந்த அன்று திடீரென உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். மருத்துவமனையில் பரிசோதித்ததில் அவருக்கு மூளைக்காய்ச்சல் எனப்படும் 'மெனிஞ்சைடிஸ்' (Meningitis) பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

Australian Cricket Legend Damien Martyn in a Condition called Induced Coma Due to Meningitis

மூளை மற்றும் தண்டுவடத்தைச் சுற்றியுள்ள சவ்வுகளில் ஏற்படும் இந்த வீக்கம் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கக்கூடியது. நிலைமை தீவிரமடைந்ததால், மருத்துவர்கள் அவருக்குச் சிறந்த சிகிச்சையை அளிப்பதற்காக அவரை செயற்கையாக கோமா நிலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

இந்திய ரசிகர்களால் மறக்க முடியாத முகம்

இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு டேமியன் மார்ட்டினை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. 2003 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா தோல்வியடைய அவரும் முக்கிய காரணம். அந்தப் போட்டியில் ரிக்கி பாண்டிங் ஒரு பக்கம் வெளுத்து வாங்க, மறுபக்கம் அமைதியாக ஆடி 88 ரன்கள் (நாட் அவுட்) குவித்து இந்தியாவின் கனவை கலைத்தவர் மார்ட்டின். கிளாசிக் மற்றும் ஸ்டைலிஷ்ஷான பேட்டிங்கிற்குப் பெயர்போனவர்.

ஸ்டீவ் வாக் மற்றும் பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலியாவின் அந்த 'அசுர' அணியில் மிடில் ஆர்டரில் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்ந்தவர். 67 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 208 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 2006 ஆஷஸ் தொடரின் பாதியிலேயே திடீரென ஓய்வு அறிவித்துச் சென்றார்.

கலங்கிப்போன கில்கிறிஸ்ட்

மார்ட்டினின் நெருங்கிய நண்பரும், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஜாம்பவானுமான ஆடம் கில்கிறிஸ்ட் இதுபற்றி கூறுகையில் மிகவும் உருக்கமாகப் பேசியுள்ளார். "மார்ட்டினுக்கு தற்போது மிகச்சிறந்த சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருடைய மனைவி அமண்டா மற்றும் குடும்பத்தினர், அனைவரும் அவருக்காக பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்" என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல முன்னாள் வீரரும், பயிற்சியாளருமான டேரன் லீமன், "லெஜண்ட்.. நீ போராட வேண்டும். தைரியமாக இரு" என எக்ஸ் தளத்தில் டேமியன் மார்ட்டினுக்காக பதிவிட்டுள்ளார்.

கிரிக்கெட் உலகையே தனது கிளாசிக் ஷாட்களால் ரசிக்க வைத்த டேமியன் மார்ட்டின், இந்த இக்கட்டான சூழலில் இருந்து மீண்டு வர வேண்டும் என்பதே உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களின் விருப்பம்.

Story first published: Wednesday, December 31, 2025, 11:09 [IST]
Other articles published on Dec 31, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+