மெல்போர்ன் : பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கிளன் மேக்ஸ்வெல் அதிகமாக மது அருந்தி போதையில் மயக்கம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
ஆஸ்திரேலிய அணியின் மிக முக்கிய வீரராக கருதப்படுபவர் மேக்ஸ்வெல். இவர் சென்னையை சேர்ந்த பெண்மணியை திருமணம் செய்து கொண்டார். நடந்து முடிந்த 2023 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் மேக்ஸ்வெல் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஆடிய ஆட்டம் அந்த அணிக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.

இப்படி பல இன்னிங்ஸ்களை மேக்ஸ்வெல் ஆடி வெற்றியை பெற்றுக் கொடுத்திருக்கிறார். ஆனால் மேக்ஸ்வெல்க்கு குடிப்பழக்கம் அதிகம் இருக்கிறது. மது போதையில் பல்வேறு சிக்கல்களில் அவர் மாட்டியிருக்கிறார். 2022 டி20 உலகக் கோப்பை முடிந்த பிறகு மேக்ஸ்வெல் நண்பரின் வீட்டுக்கு பார்ட்டிக்கு சென்று அங்கு குடிபோதையில் கீழே விழுந்து தன்னுடைய காலை உடைத்துக் கொண்டார்.
இதனால் ஆஸ்திரேலிய அணியில் இருந்து பல மாதம் விலகி இருந்த மேக்ஸ்வெல் கடந்த நவம்பர் மாதம் கோல்ப் விளையாடிய போது கீழே விழுந்து காயம் அடைந்தார். இந்த நிலையில் மேக்ஸ்வெல் கடந்த சில நாட்களுக்கு முன்பு பார்ட்டி ஒன்றுக்கு சென்று இருக்கிறார். அங்கு அளவுக்கு மீறி மது அருந்திய மேக்ஸ்வெல் திடீரென்று மயக்கம் போட்டு விழுந்திருக்கிறார்.
இதை அடுத்து அக்கம் பக்கத்தினர் மேக்ஸ்வெலை தூக்கிக்கொண்டு மருத்துவமனையில் சேர்த்து இருக்கின்றனர். மருத்துவமனையில் சிறிது நேரம் சிகிச்சை பெற்றுக் கொண்ட மேக்ஸ்வெல் நினைவு திரும்பி மீண்டும் வீட்டிற்கு சென்று இருக்கிறார். இந்த விஷயம் தற்போது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திற்கு எரிச்சலை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் மெக் டோனால்ட், மேக்ஸ்வெலை அழைத்து இது போன்ற செயல்களில் தாங்கள் ஈடுபடுவது அழகல்ல என்று கூறி கடும் எச்சரிக்கையை கொடுத்திருக்கிறார். மேலும் மேக்ஸ்வெல்க்கு மூன்று மாத காலம் ஓய்வு வழங்கி உடல் தகுதியை மேம்படுத்துவதற்கு அவர் அறிவுரை வழங்கி இருக்கிறார். ஆஸ்திரேலிய அணிக்கு மிகவும் முக்கியமான ஒரு வீரராக இருந்து கொண்டு இது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என்றும் அவர் அறிவுறுத்தி இருக்கிறார்.