"இங்கி. என்றாலே அடிப்பேன்" கம்பேக் கொடுத்த ஸ்டீவ் ஸ்மித்.. சைலண்ட் மெசேஜ் கொடுத்த ஆஸ்திரேலியா!
சென்னை: இங்கிலாந்து அணிக்கு எதிரான இரு ஒருநாள் போட்டிகளிலும் அரைசதம் விளாசி நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் மீண்டும் ஃபார்மிற்கு வந்துள்ளது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அண்மைக் காலமாக கிரிக்கெட் உலகில் ஒரு கோரிக்கை அதிகமாக எழுப்பப்பட்டு வருகிறது. அதாவது டெஸ்ட் மற்றும் ஒருநாள், டி20-க்கு என்று பிரத்யேக அணியை கட்டமைக்க வெண்டும் என்பதே அந்த கோரிக்கை. அதிலும் டி20 உலகக்கோப்பை முடிவடைந்த பின்னர், இந்த பாணியை பல கிரிக்கெட் வாரியங்கள் கையில் எடுத்துள்ளது.
ஏற்கனவே இங்கிலாந்து அணி ரெட் பால் கிரிக்கெட்டுக்கு என்று தனி அணியையும், வொயிட் பால் கிரிக்கெட்டுக்கு என்று தனி அணியையும் வைத்து விளையாடி வருகின்றனர். அந்த வகையில் வலிமை வாய்ந்த இங்கிலாந்து அணியை ஒருநாள் தொடரில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி கவனம் ஈர்த்துள்ளது.

அசத்தும் ஸ்டீவ் ஸ்மித்
குறிப்பாக கடந்த சில மாதங்களாக அமைதி காத்து வந்த ஸ்டீவ் ஸ்மித், கடந்த இரண்டு போட்டிகளில் 80* மற்றும் 94 ரன்கள் குவித்து, தான் இன்னும் சோடை போகவில்லை என்று கிரிக்கெட் உலகுக்கு அறிவித்துள்ளார். ஃபாபுலஸ் 4 என்ற அழைக்கப்பட்டு வந்த வில்லியம்சன், விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித் மற்றும் ஜோ ரூட் ஆகியோரில் ஒவ்வொருவராக ஃபார்மை இழந்து தவித்து வந்தனர்.

டி20 உலகக்கோப்பையில் ஸ்மித்
அதில் முதல் ஆளாக ஜோ ரூட் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஃபார்மிற்கு மீண்டும் வர, அதன்பின்னர் விராட் கோலி மீண்டும் உச்சத்திற்கு வந்துள்ளார். தொடர்ந்து ஸ்டீவ் ஸ்மித் எப்போது ஃபார்மிற்கு வருவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஏனென்றால் நடந்து முடிந்த உலகக்கோப்பையில் ஸ்டீவ் ஸ்மித் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே களமிறங்கி இருந்தார்.

ஸ்டீவ் ஸ்மித் சாதனை
இதனால் ஸ்டீவ் ஸ்மித்தின் கிரிக்கெட் வாழ்க்கை, இனி டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே இருக்கும் என்று பலரும் எழுதி வந்தனர். ஆனால் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலிய அணி திணறிக் கொண்டிருந்த போது, களமிறங்கி ஸ்டீவ் ஸ்மித் அசத்தியுள்ளார். கடைசியாக ஸ்டீவ் ஸ்மித் விளையாடியுள்ள 19 ஒருநாள் போட்டிகளில் 6 அரைசதமும், 4 சதமும் விளாசி அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

50 ஓவர் உலகக்கோப்பை
இனி வில்லியம்சன்னும் ஃபார்முக்கு திரும்பிவிட்டால் ஃபாப் 4-ன் போட்டி மீண்டும் ஜெகஜோதியாக தொடங்கிவிடும். அதுமட்டுமல்லாமல் ரசிகர்களும் இனி அனைத்து வீரர்களும் அனைத்து ஃபார்மட்களிலும் விளையாட வேண்டும் என்று எதிர்பார்ப்பில் இருக்கக் கூடாது என்று செய்தியையும் கிரிக்கெட் போட்டிகள் மறைமுகமாக அறிவுறுத்தி வருகிறது. அடுத்த ஆண்டு இந்தியாவில் 50 ஓவர் உலகக்கோப்பைத் தொடர் தொடங்க உள்ள நிலையில், முக்கிய அணிகள் இப்போதே தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications